தனது உடலைப் பற்றி எழுந்த மிக மோசமான கருத்துகளை பிரபல நடிகை ராதிகா ஆப்தே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே
2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வாஹ் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து நடிகையாக முதல்முறையாக ராதிகா ஆப்தே அறிமுகமானார். இவர் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி என பல படங்களில் நடித்தார். இதில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்து நடிப்பில் அசத்தினார்.
தமிழ், இந்தி, பெங்காலி,மராத்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே குறும்படம், டிவி நிகழ்ச்சிகள், என பலவற்றிலும் பங்கேற்றுள்ளார். இப்படியான நிலையில் இந்தியில் Mrs Undercover என்ற வெப் தொடர் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகவுள்ளது.
Mrs Undercover வெப் தொடர்
ஏப்ரல் 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடரில் துர்கா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். சுமித் வியாஸ் இந்த வெப் தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார். காமெடி ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள Mrs Undercover தொடரின் ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திருமணத்திற்கு பின், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்கு வரும் பெண் ஸ்பையின் திறமை கொலையாளியை பிடிக்க உதவியதா?, குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை ரசிகர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான நேர்காணல் ஒன்றில், தனது உடலைப் பற்றி எழுந்த மோசமான கருத்துகள் பற்றி ராதிகா ஆப்தே பேசியுள்ளார். அதில், “திரையுலகம் ‘ஒழுக்கமற்ற’ நபர்களால் நிரம்பியுள்ளது என்ற கட்டுக்கதையை உடைக்க விரும்புகிறேன். அதேசமயம் சிலர் தன்னிடம் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதை அவர் நினைவு கூர விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “பத்லாபூர் படம் வெளியாகும் வரை என்னால் கிராமத்து கேரக்டர்கள் தான் செய்ய முடியும் என நினைத்தார்கள். அப்படத்திற்கு பின் அடல்ட் காமெடிகளை மட்டுமே செய்ய முடியும் என நினைத்தார்கள். மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நான் கவலைப்படுவதில்லை” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் “கடந்த காலத்தில் என்னுடைய தோற்றத்தைப் பற்றி பல கருத்துகள் சொன்னார்கள். மூன்று,நான்கு கிலோ எடை அதிகமாக இருந்ததால் ஒரு படத்தை இழந்தேன். ஏன் உங்களுக்கு மூக்கு நன்றாக இல்லை? ஏன் பெரிய மார்பகங்கள் இல்லை? என கேட்டார்கள். சிலர் என்னுடைய உடலைப் பற்றி தங்களுக்கு உரிமை உள்ளது போல் கருத்துத் தெரிவிப்பார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பேசுகிறோம். இதுபோன்ற கருத்துக்களை இனி பொறுத்துக் கொள்ள முடியாது. யாரேனும் தற்போது இப்படிச் சொன்னால், அவர்களை என் வாழ்வில் இருந்து நீக்குவது உறுதி” என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours