திரையுலகில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த இமான்
12 ஏப், 2023 – 10:54 IST
தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இமான். டிவி சீரியல்களுக்கு இசையமைத்து, அவற்றில் சில டைட்டில் பாடல்களை சூப்பர் ஹிட்டாக்கியதால் பேசப்பட்டவர். 2000ல் ஒளிபரப்பான ‘கிருஷ்ணதாசி’ என்ற தொடரின் டைட்டில் பாடலான ‘சிகரம் பார்த்தாய்…’ என்ற பாடல் இமானுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது.
அதன்பின் ‘கோலங்கள், அகல்யா, கல்கி, திருமதி செல்வம், கலசம்’ என பல டிவி தொடர்களின் முகப்பு இசையைக் கொடுத்தவர் இமான்.
‘கிருஷ்ணதாசி’ தொடரைத் தயாரித்த நடிகை குட்டி பத்மினியே இமானை அவர் தயாரித்த ‘காதலே சுவாசம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராய் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்தப் படம் வெளியாகவேயில்லை. பின்னர் 2022ல் விஜய், பிரியங்கா சோப்ரா நடித்து ஏப்ரல் 12ல் வெளிவந்த ‘தமிழன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இமானின் பெயர் சினிமா ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்தது.
அதன் பிறகு பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் 2010ல் வெளிவந்த ‘மைனா’ படம்தான் இமானுக்கு பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கும், முன்னணி கதாநாயகர்களுக்கும் இசையமைத்தார். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற அப்பா, மகள் பாடலான ‘கண்ணான கண்ணே’ பாடல் எவர்க்ரீன் பாடலாக இப்போதும் ரசிக்கப்படுகிறது. தற்போது நான்கைந்து படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார் இமான்.
இளம் வயதில் இசையமைப்பாளராக சுயமாக அறிமுகமாகி டிவி தொடர்கள், எண்ணற்ற விளம்பரங்கள், திரைப்பட இசை என உயர்ந்த இமானின் முயற்சி இன்றைய இளம் திறமைசாலிகளுக்கு சரியான உதாரணம்.
+ There are no comments
Add yours