மும்பை டிராஃபிக்கை சமாளிக்க நடிகை ஹேமமாலினி மெட்ரோ ரயில், ஆட்டோ எனப் பயணித்து தன் வீட்டை அடைந்தது பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட் சென்று இந்தியாவின் முதல் ட்ரீம் கேர்ளாக உருவெடுத்து, பின் நடிகர் தர்மேந்திராவை காதல் திருமணம் செய்து வடக்கே கோலோச்சியவர் நடிகை ஹேமமாலினி. இந்திய சினிமாவில் பல ஆண்டு காலம் ஹீரோயினாகவும் கனவுக்கன்னியாகவும் கோலோச்சிய ஹேமமாலினி, பாஜகவில் இணைந்து தற்போது மதுரா தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
தற்போது 74 வயதாகும் ஹேமமாலினி தொடர்ந்து தன் சர்ச்சைக் கருத்துகள், மற்றும் அதிரடி செயல்களுக்காக லைம்லைட்டில் இருந்து வருகிறார். அந்த வகையில் மும்பை ட்ராஃபிக்கை சமாளிக்க நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமமாலினி, மெட்ரோ ரயில், ஆட்டோ எனப் பயணித்து வீடு போய் சேர்ந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
பிங்க் நிற டாப், வெள்ளை பேண்ட், ஸ்லிங் பேக் என இன்றைய இளவயது பெண் போல் மெட்ரோவில் கேஷூவலாகப் பயணித்துள்ள ஹேமமாலினி இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“இது ஒரு தனித்துவமான, அற்புதமான அனுபவம், இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தஹிசரை அடைய 2 மணிநேரம் காரில் பயணித்தேன், மிகவும் சோர்வாக இருந்தது. இதனால் நான் மெட்ரோவை முயற்சிக்க முடிவு செய்தேன்.
என்ன ஒரு சந்தோஷம்! மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது நாம் கடினமான நாள்களை எதிர்கொண்டோம், ஆனால், நிச்சயம் அது மதிப்புமிக்கது. சுத்தம், வேகம், அரை மணி நேரத்தில் ஜுஹூவை அடைந்து விட்டேன்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் ரயில் பயணத்தின்போது சக பயணிகளிடம் கேஷூவலாக உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கிய வீடியோக்களையும் ஹேமமாலினி பகிர்ந்துள்ளார்.
மேலும் அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தன் வீட்டுக்குப் பயணித்த ஹேமமாலினி, அது குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். “என்ன ஒரு ட்ராஃபிக், மக்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்று தெரியவில்லை, பயமாக இருந்தாலும் இந்தப் பயணம் சுவார்ஸ்யமாக இருக்கிறது” என ஜாலியாக வீடியோ பகிர்ந்துள்ளார்.
ஹேமமாலினியின் இந்த மெட்ரோ பயண வீடியோக்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. இதே போல் சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகை சாரா அலி கானும் மும்பை டிராஃபிக்கை சமாளிக்க மெட்ரோவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours