கடும் போட்டிகள் இல்லாத தமிழ்ப் புத்தாண்டு 2023
11 ஏப், 2023 – 16:42 IST
கொரோனா தாக்கத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக திரைப்பட வெளியீடுகள் தாறுமாறாகிக் கிடக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த படங்கள் கூட இன்னும் வெளியாகாத நிலையே உள்ளது. சில படங்கள் பல முறை தேதி அறிவிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருக்கின்றன.
2020ம் ஆண்டு மார்ச் மாதக் கடைசியில் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதனால், அந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு படங்கள் வெளியாகவில்லை.
2021ம் ஆண்டில் கொரானோ இரண்டாவது அலை ஆரம்பமானது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பாகவே ஏப்ரல் 2ம் தேதி கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படமும், ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படங்களும் வெளியாகின. ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 16ல் சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளிவந்தன. அப்போது ஏப்ரல் 10 முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த வருடம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் மட்டுமே வெளிவந்தது.
இந்த வருடம் 2023ம் ஆண்டில், ஏப்ரல் 14ம் தேதியன்று “இரண்டில் ஒன்று பார்த்துவிடு, ருத்ரன், திருவின் குரல், ரிப்பப்பரி, சொப்பன சுந்தரி, யானை முகத்தான்” ஆகிய நேரடி படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’, அருள்நிதி நடித்துள்ள ‘திருவின் குரல்’ ஆகிய படங்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படங்களுடன் சமந்தா நடித்து தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவரும் ‘சாகுந்தலம்’ படம் வெளியாக உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட விஜய் ஆண்டனி நடித்த ‘தமிழரசன்’ படம் மீண்டும் தள்ளிப் போகலாம் எனச் சொல்கிறார்கள்.
ஒரு பக்கம் ஐபிஎல், மறுபக்கம் கோடை வெயில், பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாதது என இந்த வருட தமிழ்ப் புத்தாண்டு படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
+ There are no comments
Add yours