இந்த ஏப்ரல் மாதம் சினிமா சங்கங்களுக்குத் தேர்தல் சீசன் போல. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இரண்டின் தேர்தலும் இந்த மாதம் நடைபெறவிருக்கிறது. இந்தச் சங்கங்களில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பதவி வகித்துவரும் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தோடு முடிவடைந்துவிட்டதால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026-க்கான தேர்தல் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி, தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணி என இரண்டு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். நலன் காக்கும் அணியின் சார்பில் என்.முரளி ராமசாமி தலைவர் பதவிக்கும், துணைத்தலைவர் பதவிக்கு ஜி.எம்.தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு ஆர். ராதாகிருஷ்ணனும், எஸ்.கதிரேசனும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு விஜயமுரளி, அழகன் தமிழ்மணி, ஆர்.மாதஷ், சித்ராலட்சுமணன், மனோஜ்குமார், ஷக்தி சிதம்பரம் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
அதைப் போல, தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு ‘மன்னன் பிலிம்ஸ்’ டி.மன்னன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு விடியல் ராஜுவும், செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு லிப்ரா ரவீந்தரும், இணைச் செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டனும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பெப்சி எஸ்.விஜயன், கனல் கண்ணன், தேவயானி உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தல் குறித்து நலன் காக்கும் அணியின் சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் விஜயமுரளியிடம் பேசினோம். ”வாக்கு சேகரிப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தயாரிப்பாளர்களின் வீடு வீடாக, கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கி, ஓட்டுகளைக் கேன்வாஸ் செய்து கொண்டிருக்கிறோம். ‘சொன்னதைச் செய்தோம். சொல்வதைச் செய்வோம். ஒன்றுபட்டு வெல்வோம்’ என்ற வலுவான குரலோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறோம்” என்கிறார் அவர்.
உரிமை காக்கும் அணியின் சார்பில் கமீலா நாசரிடம் பேசினால். ”பேட்டி அளிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு உள்ளது” என முடித்துக்கொண்டார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைப் போலவே, 2023-2026ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தலும் நடக்கிறது. வரும் 23ஆம் தேதி பெப்சி அலுவலகத்தில் இந்தத் தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியைத் தவிர யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் செயலாளர் பதவிக்கு சுவாமிநாதன் மற்றும் பொருளாளர் பதவிக்கு செந்தில் குமரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் யாரும் போட்டியிட முன்வராததால் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்கின்றனர்.
+ There are no comments
Add yours