இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘வானம் கலைத் திருவிழா’ கடந்த ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் ஒருபகுதியாக ஏப்ரல் 7-9ம் தேதி வரை `PK ரோசி திரைப்பட விழா’ சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லாப் திரையரங்கில் நடைபெறுகிறது. இதில் `ஜெய் பீம்’, `நட்சத்திரம் நகர்கிறது’, `விட்னஸ்’ மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் எனப் பல திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இவ்விழாவின்போது செய்தியாளார்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தங்கலான் திரைப்படம் குறித்தும் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.
இது பற்றி பேசிய அவர், “தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. குறிப்பாக, கோலார் தங்க சுரங்கத்தில் (KGF) 55 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டிருக்கிறது. இந்த மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிடும் என்று நினைகிறேன். அங்கு படப்பிடிப்பு செய்வது அவ்வளது எளிதாக இல்லை, மிகவும் சவாலாக இருந்தது. இதில் எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தில் VFX வேலைகள் நிறைய இருக்கு. இப்படம் ரொம்ப சுவாரஸ்யமாகவும், மக்களுக்குப் பிடித்த திரைப்படமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் `தங்கலான்’ வெளியாகும்.
அடுத்தாக கமல் சார் படத்திற்கும் ஸ்கிரிப்ட் எழுதிகிட்டு இருக்கேன். `சார்பட்டா பரம்பரை -2′ ஸ்கிரிப்ட் பணிகள் இருக்கு. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இருப்பாரா என்று தெரியவில்லை. அதுபற்றி இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.
சமீபத்தில் ஆளுநர் ரவி, ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களைத் தூண்டிவிட்டுதான் தூத்துக்குடி போரட்டம் நடந்தது’ என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியிருந்தது பேசுபொருளாகியுள்ளது.
இதுபற்றி கூறிய பா.ரஞ்சித், “கவர்னர் ரவி, கவர்னர் வேலையைத் தவிர மற்ற வேலைகளையெல்லாம் பார்க்கிறார். அவர் எந்த அடிப்படையில், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பொது சமூகத்தில் சர்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். ரோகினி திரையரங்கில் பழங்குடியினருக்கு நடந்த ஒடுக்குமுறை பற்றி பேசிய ரஞ்சித், “இது ரோகினி திரையரங்கில் மட்டுமல்ல பல திரையரங்கிலும், மால்களிலும் என எல்லா இடங்களிலும் நடக்கிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours