90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குநர் மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார்.
இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த 2002-ல் வெளியான ‘பாபா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். பாபா படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு மனிஷா கொய்ராலா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், “ தமிழில் கடைசியாக நான் நடித்த மிகப் பெரிய படம் பாபாதான். பாபா படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் தோல்வியைச் சந்தித்தது. படத்தின் தோல்வி எனது கரியரை பாதிக்கும் என்று நினைத்தேன்.
நான் நினைத்ததைப் போலவே தென்னிந்திய சினிமாவில் என்னுடைய கரியரே முடிந்தது. பாபாவுக்கு முன்னர் சில தென்னிந்திய சினிமா பட வாய்ப்பு எனக்கு கிடைத்து. ஆனால் அந்தப் படத்தின் தோல்விக்கு பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாபா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. நான் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தை பார்த்தேன். எனக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours