வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, வெற்றி மாறன் பற்றியும் வாத்தியார் கதாபாத்திரம் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுபற்றி விரிவாகப் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படம் வெளியான அன்று வெற்றி எனக்கு போன் பண்ணியிருந்தார். `எல்லா டார்ச்சரையும் பொறுத்துக்கிட்டு இந்தப்படத்தில் நடிச்சதுக்கு நன்றி. அமெரிக்காவில் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. எல்லாருக்கும் பிடிச்சிருக்கு’ என்றார். படம் நல்லா இருக்குனு சொல்லி கடைசியா எனக்கு எப்போ இப்படியொரு போன் கால் வந்துச்சுனு எனக்கே சரியா ஞாபகம் இல்ல, ரொம்ப நாளாச்சு.

உண்மையில், இந்தப் படத்தில் எதைப் பார்த்தாலும் வெற்றி சார்தான் பிரதானமாகத் தெரிகிறார். வார்த்தைகளுக்கு முன்பாக உணர்வுகள்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் வெற்றி சாரின் மனதையும், அவர் மனதில் நினைப்பதையும் உணரவே முயற்சிப்பேன்.
அவர் பரபரப்பாக இருந்தால் அந்தப் பரபரப்பு எனக்குள்ளும் வந்துவிடும். எனவே வெற்றி சாரை நிதானமாக இருக்கச் சொல்லி அதிலிருந்து அவர் என்ன நினைக்கிறாறோ அதை உணர்ந்து கொண்டு அதை நடிப்பில் கொண்டுவர நான் முயலுவேன்.

அந்த போலீஸ் ஸ்டேஷனில் நுழையும் காட்சியை வெற்றி நடித்துக் காண்பித்தார். அப்போது அவரிடமிருந்த அந்த உடல்மொழியையும், கம்பீரத்தையும், எனர்ஜியையும் பார்த்து மிரட்டுபோய்விட்டேன். அதை என்னுடைய பாணியில் அப்படியே நடித்தேன். அவரின் சிந்தனை, கிரகிக்கும் தன்மை, ஞாபக சக்தியெல்லாம் பார்த்து நான் வியக்கிறேன். நல்லவேளை நான் பெண்ணாகயில்லை, பெண்ணாக இருந்திருந்தால் அவரை உஷார் பன்னியிருப்பேன். உண்மையில், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையிருக்கிறது.
இப்படத்தின் ஒவ்வோரு காட்சியின் தொடக்கமும் அவரின் எனர்ஜியிலிருந்துதான் ஆரம்பித்தது. அவரின் சிந்தனையும், எனர்ஜியும்தான் இப்படம் உருவாகக் காரணம். காலம் தாண்டி, மொழிதாண்டி படத்தின் மூலம் ஒரு சிந்தனைப் பொறியை உண்டாக்குவது சாதாரணமல்ல. அதை வெற்றி செய்துவருகிறார்.

நூறு பக்கம் படித்து அதை பத்து வரிகளில் எழுதுகிறார். அதில் இருக்கும் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு நான் புரிந்து கொள்வேன். அவர் என்ன நினைக்கிறார், அவரின் உடல் மொழி எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்து, புரிந்து, கிரகித்துக் கொண்டு இந்த வாத்தியார் கதாபாத்திரத்தை நடித்தேன். விமர்சனம் பண்ணுபவர்கள், மக்கள் எனப் பலர் விஜய் சேதுபதியைத் தனியாகவும், படத்தின் கதாபாத்திரமான வாத்தியாரைத் தனியாகவும் பிரித்துச் சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாத்தியார் நான் இல்லை, அதற்கான அறிவும் என்னிடத்தில் இல்லை. நிச்சயமாக வெற்றி மாறான்தான் எப்போதும் வாத்தியார்” என்று கூறினார்.
சூரி பற்றி பேசிய விஜய் சேதுபதி, “காமெடி நடிகராக இருந்து இப்படி ஒரு பிரமாதமான நடிகராக மாறுவது சாதரணமானதல்ல. அதை சூரி சிறப்பாகச் செய்திருக்கிறார். இது சூரிக்கு கிடைத்த வெற்றி, வெற்றிமாறன் கொடுத்த வெற்றி. இந்த நேரத்தில் நிறையபேர் நிறைய விதமாக பேசுவார்கள், அறிவுரை கூறுவார்கள் பார்த்து கவனமாக இருக்கணும் சூரி” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
+ There are no comments
Add yours