ஜீ தமிழ் சேனலில் `சரிகமப’ மியூசிக் ரியாலிட்டி ஷோ மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் ரமணியம்மாள். அந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். வீடுகளில் பாத்திரம் தேய்க்கும்போது பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது பாடலைக் கேட்ட வீட்டு உரிமையாளர் `சரிகமப’ நிகழ்ச்சி குறித்துக் கூறவும் அதில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். திறமைக்கு வயது தடை இல்லை என உணர்த்தியவர். 67 வயதான ரமணியம்மாள் இன்று இயற்கை எய்திருக்கிறார். இது தொடர்பாக ரமணியம்மாளின் மகனிடம் பேசினோம்.
” மூணு மாசமாகவே அம்மா உடம்பு முடியாம தான் இருந்தாங்க. கிட்னியிலும், ஹார்ட்டிலும் பிரச்னை இருந்துச்சு. ஹெல்த் சென்டருக்குப் போய் பரிசோதனை செய்தோம். அங்க டாக்டர் பரிசோதனை செய்துட்டு மாத்திரை கொடுத்தாங்க. அந்த மாத்திரையைப் போட்டா இருமல் வருதுன்னு அம்மா அதை போடுறதில்ல.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொம்ப உடம்பு முடியாம ஆகிடுச்சு. ஓமந்தூரார் போய் காட்டினோம். அங்க பரிசோதனை செய்துட்டு உடம்புக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. தனியார் மருத்துவமனைக்கும் கூட்டிட்டுப் போனோம். ஒண்ணும் இல்லைன்னு சொன்னதால தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்.
நேற்றெல்லாம் எங்ககிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. இன்னைக்கு காலையில தூக்கத்துலேயே உயிர் போயிருச்சு. திடீர்னு இப்படி எங்களை விட்டுட்டுப் போவாங்கன்னு நாங்க நினைக்கல!” என்றவாறு கண் கலங்கினார்.
ரமணியம்மாளின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற இருக்கிறது. ரமணியம்மாளின் வெள்ளந்திப் பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். `ராக் ஸ்டார்’ என்கிற பட்டப் பெயரையும் வழங்கி அவரை மக்கள் கொண்டாடினார்கள். சமீபத்தில் வெளியான `பொம்மை நாயகி’ திரைப்பட்டத்திலும் ரமணியம்மாள் பாடியிருந்தார். அவருடைய திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்ந்த இரங்கல்கள் ரமணியம்மாள்!
+ There are no comments
Add yours