‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ!’
‘கண்ணே… நவமணியே… உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ’ என்று டைட்டில் கார்டில் இளையராஜா பாடிய உருக்கமான பாடலே படத்தின் பல இடங்களில் பின்னணி இசையாக வந்து நெகிழ்வூட்டுகிறது. ‘உயிரே… உயிரின் ஒளியே’, ‘குயிலே… குயிலே குயிலக்கா…’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராராரோ…’ என்பது போன்ற இனிமையான பாடல்கள் படத்திற்குக் கூடுதல் சுவையைச் சேர்த்திருந்தன.
சத்யராஜூம் ரகுவரனும் குழந்தைக்காக அடித்துக் கொள்வதைப் பார்த்து சிறுமி பயந்து அழ, சமாதானப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் பாடல் சுவாரஸ்யமானது. சத்யராஜை அழைத்துச் செல்வதற்காக ரகுவரன் மைதானத்தில் காத்திருக்கும் ஒரு காட்சியின் பின்னணியில் ‘காலெல்லாம் நோகுதடி’ என்று இளையராஜாவின் குரலில் வரும் சிறிய பாடல், ஒரு குயிலின் சோகத்திற்கு இணையானது.
காட்சிகள், வசனங்களைத் தாண்டி பின்னணி இசையின் மூலம் திரைக்கதையை அற்புதமாக நகர்த்திச் சென்றிருந்தார் இளையராஜா. தன்னைத் தேடும் சுஹாசினியின் முந்தானையைச் சிறுமி பிடித்து இழுக்கும் காட்சியில் வரும் குழலோசை, குழந்தையின் அறை முழுவதும் பொம்மைகளாலும் விளையாட்டுச் சாமான்களாலும் நிறைந்திருப்பதை ஃபாதிரியார் திகைப்புடன் பார்க்கும் காட்சியில் வரும் இசை, சுஹாசினியை முதன் முதலில் ‘அம்மா’ என்று குழந்தை அழைக்கும் போது ஒலிக்கும் வீணையின் மீட்டல் என்று படம் முழுவதும் இசை ராஜாங்கத்தை ஏற்படுத்தியிருந்தார் இளையராஜா.
‘Ente Mamattukkuttiyammakku’ என்கிற தலைப்பில் 1983-ல் வெளியான மலையாள வடிவத்தில் சத்யராஜ் பாத்திரத்தில் பரத் கோபியும், சுஹாசினி பாத்திரத்தில் சங்கீதா நாயக்கும், ரகுவரன் பாத்திரத்தில் மோகன்லாலும், ரேகா பாத்திரத்தில் பூர்ணிமா ஜெயராமும் நடித்திருந்தார்கள். குறிப்பாக கீத்து மோகன்தாஸின் பாத்திரத்தில் ‘பேபி’ ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். அவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் மூலம்தான் பிரபலமான குழந்தை நட்சத்திரமானார்.
+ There are no comments
Add yours