‘அயோத்தி’ கதை சர்ச்சை, ஓடிடியில் நன்றி கார்டு போட்ட குழு
07 ஏப், 2023 – 11:10 IST
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் ‘அயோத்தி’. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. அப்படத்தின் கதையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். ஆனால், இக்கதை அவருடைய கதையல்ல என்று சர்ச்சை எழுந்தது. எழுத்தாளர்கள் மாதவராஜ், நரன் ஆகியோர் அக்கதை தங்களது கதை என்று புகார் தெரிவித்தார்கள். மேலும், சங்கர் தாஸ் என்பவர் அப்படத்தின் திரைக்கதையை தான்தான் எழுதினேன் என்றும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் படம் வெளிவந்த போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாதவராஜ் எழுதிய ‘அழக் கூட திராணியற்றவர்கள்’ என்ற கதை, நரன் எழுதிய ‘வாரணாசி’ என்ற கதை ஆகியவற்றைத் தழுவியே ‘அயோத்தி’ கதை எழுதப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்களும், அவர்களது நண்பர்களும் பேஸ்புக்கில் பல பதிவுகளை இட்டிருந்தார்கள். இப்படத்திற்காக 2018ல் திரைக்கதை எழுதிக் கொடுத்தேன். ஆனால், அப்போது அத்தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்காமல் டிராப் செய்துவிட்டார். அதன் பிறகு அப்படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால், என் திரைக்கதையைத்தான் அப்படியே ‘அயோத்தி’ ஆகப் பயன்படுததியுள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ‘அயோத்தி’ படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ்பாபு” ஆகியோருக்கு நன்றி கார்டு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மதுரையில் 2011ம் ஆண்டு பீகார் கிராம வங்கியில் பணியாற்றிய ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் விபத்தில் சிக்கியது. அப்போது அவர்களை ‘பாண்டியன் கிராம வங்கி’யில் பணியாற்றிய சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு ஆகியோர்தான் அந்த பீகார் குடும்பத்தினருக்கு உதவி செய்தனர். அவர்களது நண்பரான எழுத்தாளர் மாதவராஜுக்குத்தான் அந்த விபத்து பற்றி முதலில் தகவல் வந்து, அவர் ஊரில் இல்லாத காரணத்தால் சாமுவேல், சுரேஷ் பாபு ஆகியோரை உதவி செய்யச் சொல்லியிருக்கிறார். இதைத்தான் ‘அழக் கூடத் திராணியற்றவர்கள்’ என்று மாதவராஜ் கதையாக எழுதியிருந்தார்.
ஆனால், ‘அயோத்தி’ படக்குழு கதையை எழுதியவர்களுக்கு நன்றி கார்டு போடாமல் நிஜத்தில் உதவி செய்தவர்களுக்கு மட்டும் நன்றி கார்டு போட்டுள்ளது.
+ There are no comments
Add yours