விடுதலை படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இயக்குநர் வெற்றி மாறன் தன் உதவி இயக்குநர்களுக்கு நிலம் பரிசளித்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

விடுதலை இன்று ரீலீஸ்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “விடுதலை”. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க, போராளி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதேசமயம் முதல்முறையாக வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கடந்த மார்ச் 8 ஆம் தேதி விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”8 நாட்கள் தான் விடுதலை படப்பிடிப்பு என்று சொல்லிவிட்டு என்னை பல நாட்களாக நடிக்க வைத்து வெற்றிமாறன் ஏமாற்றி விட்டார்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, சினிமா நடிகர்களையும் சரி, இயக்குநர்களையும் சரி தலைவர் என அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் 25 ஆண்டுகளில் துணை நடிகர் என்பதில் இருந்து காமெடி நடிகராகி இன்று ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சூரிக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதவி இயக்குநர்களுக்கு பரிசளித்த வெற்றிமாறன்

சினிமாவை பொறுத்தவரை படக்குழுவினருக்கு ஹீரோ, ஹீரோயின் தொடங்கி தயாரிப்பு தரப்பு வரை பரிசுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறன் விடுதலை படத்தில் தன்னுடன் பணிபுரிந்த 25 பேருக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த நிலங்களை விற்கக்கூடாது என தெரிவித்துள்ள வெற்றிமாறன், அதில் விவசாயம் அல்லது வீடு கட்டிக் கொள்ளுமாறு அன்பு கட்டளையும் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வெற்றிமாறன் வேடந்தாங்கல் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

+ There are no comments
Add yours