Dasara
ஆக்சன்-ட்ராமா
இயக்குனர்: Srikanth Odela
கலைஞர்: Nani/Keerthy Suresh
Dasara Movie Review Tamil: கதாநாயகனாக நானி, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பிலும், தீக்சித் செட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் நடிப்பிலும் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம்தான் தசரா. பான் இந்திய திரைப்படமாக, இன்று வெளியாகியுள்ள இத்திரைப்படம் குறித்தான விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
கதையின் கரு:
நிலக்கரி சுரங்கத்தை சுற்றியுள்ள வீர்லபள்ளி எனும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு குடிதான் எல்லாம். அதில் ஒருவன் தரணி (நானி). தன் நண்பன் சூரி-க்காக ( தீக்சித் செட்டி) உயிரையும் கொடுக்க துணியும் இவர், தான் சிறுவயதிலிருந்தே காதலிக்கும் வெண்ணிலா மீதான ஒருதலை காதலையும் விட்டு கொடுக்கிறார்.
சூரிக்கும் வெண்ணிலாவிற்கும் திருமணம் நடந்த அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? தனது உயிர் நண்பன் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தவர்களை தரணி பழி தீர்த்தாரா? வெண்ணிலாவின் கதி என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுடன், எப்போதும் போன்ற கமர்சியல் திரைப்படமாக நகர்கிறது திரைக்கதை.
ஜாலியான முதல் பாதி:
நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் உள்ள கிராமம், அவ்வூர் ஆண்களின் மதுப்பழக்கத்தினால் சீரழியும் குடும்பம் என முதல் 10 நிமிடங்களுக்கு மெதுவாகவே நகர்கிறது திரைக்கதை. பிறகு, காதல்-காமெடி, திருமணம் என ஜாலியாக செல்கிறது முதல் பாதி. இடைவேளைக்கு முன்பு வரை தொடை நடுங்கியாக இருக்கும் ஹீரோ, இரண்டாம் பாதியில் வீரனாக மாறுவது நம்புவதற்கில்லை என்றாலும், அதை நம்பித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை என்ற நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்படுகின்றனர்.
ரத்தம் தெறிக்கும் இரண்டாம் பாதி:
சூரியின் இறப்பிற்கு பின்னால் அரசியல் ஆதாயம் இருக்கும் என்று பார்த்தால், கதையவே மாற்றி, சம்பந்தமே இல்லாமல் ஸ்பாட்லைட் முழுவதையும் கீர்த்தியின் பக்கம் திருப்பி விட்டனர். கீர்த்தியின் மீது நானிக்கு இருக்கும் ஒருதலை காதலை ரசிகர்களின் மனதில் அதை ஓட வைத்த இயக்குனர், அவர்களின் வாழ்க்கையில் இணைந்த பின் இருக்க வேண்டிய காதல் காட்சிகளை இணைக்க தவறி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் பழிவாங்கல், சண்டை, ரத்தம் என ஆக்சன் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சி நம்புவதற்கு இல்லை என்றாலும், அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படியிருக்க நானியின் புதிய அவதாரம்?
வழக்கமாக காதல்-காமெடி என ரசிகைகளின் மனங்களில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்களையே செய்து வந்த நானி, முதல் முறையாக ஆக்சஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் தரணி என்ற சாதாரண இளைஞனாகவும், நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை தேடித்தேடி பழிவாங்கும் வெறி பிடித்த மனிதராகவும் மனதில் நிற்கிறார், நம்ம ஹீரோ. முதல் பாதியில், இவரை மற்றவர்கள் பயந்த சுபாவம் என கூறுவதற்கு ஏற்ற நடிப்பு இவரிடம் இல்லையோ? என தோன்றுகிறது. இனிவரும் படங்களிலும் நானி, இது போன்ற பல ஆக்சஷன் அவதாரங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்-ஜாதி-காதல்-காமம்:
130 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் ஒரே ஒரு மதுக்கடை, அதை சுற்றி நிகழும் அரசியல், சாதி பாகுபாடு என அத்தனை விஷயங்களையும் அலசுகிறது தசரா. ஆனால் இத்தனையும் ஊறுகாய் போல தொட்டு கொள்வது ஏன் என்றுதான் தெரியவில்லை. குடியும் குடித்தனமுமாக இருக்கும் ஆண்களுக்கு கடைசியில் கூறும் சமூக கருத்துக்களுக்கு பாராட்டுகள். கீர்த்தியின் மீது அதீத காமம் கொண்ட கொடூரனாக வரும் சின்ன நம்பியின் (ஷைன் டாம் சாக்கோ) நடிப்பு அபாரம். வில்லனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சமுத்திரகனி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்.
பல நட்சத்திரங்கள் இருந்தும் ஜொலிக்கவில்லை:
தரணியாக நானியும் வெண்ணிலாவாக கீர்த்தியும் படம் முழுவதும் வருவதால், அந்த கதாபாத்திரங்களாகவே மனதில் நிற்கின்றனர். இவர்களை தவிர சூரியாக வரும் தீக்சித் செட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி, சாய்குமார் போன்ற பெரிய நடிகர்களுக்கு பெரிதாக வேலையே இல்லை. வில்லனாக வரும் ஷைன் டாம் டாக்கோ அபாரம்.
லேசாக கே.ஜி.எஃப் வாடை வருகிறது…
கே ஜி எஃப் படத்தில், தங்க சுரங்கம், காற்று முழுவதும் கருப்பு என கூறப்பட்டிருக்கும் கான்செப்டை தசரா படத்திலும் ஃபாலோ செய்துள்ளனரோ என தோன்ற வைக்கிறது. அந்த நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வாழும் மக்களும் கே ஜி எஃப் மேக்-அப் போடப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.
மொத்தத்தில், நம்பமுடியாத காட்சிகளை அடுக்கி, அதில் கொஞ்சம் ஆக்சன் மசாலாக்களை தூவியது போல “தசரா” திரைப்படம் இருக்கிறது.
+ There are no comments
Add yours