கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படம் வரும் மார்ச் 31ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், இந்தப் படத்தின் ராவடி வீடியோ பாடல் நேற்று வெளியானது.

கம்பேக் கொடுக்கும் சாயிஷா

நடிகர் ஆர்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளுக்கு முன் செட்டிலான நடிகை சாயிஷா இந்தப் பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கலக்கலான ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான திலீப்குமாரின் உறவினரான சாயிஷா, தமிழ் சினிமாவில் வனமகன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தன் சிறப்பான நடனத்துக்காக ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாயிஷா படங்களைத் தாண்டி தன் சமூக வலைதளப் பக்கங்களிலும் நடனமாடி அசத்தி இணையத்தில் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வந்தார்.

ஆர்யாவுடன் காதல் – திருமணம்

தொடர்ந்து ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. தன் திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து விலகி குழந்தையின் மீது கவனம் செலுத்தி வந்த நடிகை சாயிஷா தற்போது மீண்டும் கம்பேக் தர திட்டமிட்டு வருகிறார்.

ஊ சொல்றியா பாடலுக்கு டஃப்

அதற்கான முன்னோட்டமாக தனக்கு மிகவும் பிடித்த நடனத்துடனேயே பத்து தல படத்தில் ராவடி பாடலில் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார் சாயிஷா.

நேற்று இந்தப் பாடல் வெளியான நிலையில், சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சாயிஷா பின்னியிருப்பதாகக் கூறி நேற்று மாலை தொடங்கி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

திருமணமாகி குழந்தை பெற்ற பின் குறுகிய காலத்தில் நடிகை சாயிஷா இவ்வளவு ஃபிட்டாக சிறப்பான கம்பேக் கொடுத்திருப்பது நெட்டிசன்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற பத்து தல படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சாயிஷா பேசியதாவது:

ஆர்யா தான் காரணம்

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் இங்கே ஒரு ஆண் இருக்கிறார். ஞானவேல் ராஜா அண்ணா வீட்டுக்கு வந்தபோது நான் இப்படி ஒரு பாடலை படமாக்க இருக்கிறேன். யாரை ஆட வைப்பது எனத் தெரியவில்லை என்று கூறினார். அப்போது பேசிய ஆர்யா “சாயிஷாவும் பணிபுரிகிறார். நீங்கள் ஏன் அவரைக் கேட்கக்கூடாது” என்றார்.

ஆர்யா அவ்வளவு முற்போக்கான ஆள், அவர் கிடைத்தது என் ஆசிர்வாதம். இந்தப் பாடலுக்கான படப்பிடிபபுக்கு வந்தபோது என்னை வீட்டில் இருப்பவர்கள் போல் பார்த்துக் கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பணியாற்றுவ்து ஒரு கனவைப் போன்றது. என் பக்கெட் லிஸ்டில் ஒரு விஷயம் நிறைவேறியுள்ளது.

சிம்புவுடன் சீக்கிரம் பணியாற்றுவேன்

பிருந்தா மாஸ்டர் என்னை சிறப்பாகப் பார்த்துக் கொண்டதுடன், அருமையாக கொரியாகிராஃப் செய்துள்ளார்.

கௌதம் கார்த்திக் என் நல்ல நண்பர். கௌதம்மை இந்த புது கெட் அப்பில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் கிருஷ்ணாவுடன் 2 நாள்கள் பணிபுரிந்தது பல மாதங்கள் பணிபுரிந்த உணர்வைத் தந்தது. அவரை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நடிகர் சிம்புவுடன் இன்னும் பணியாற்றவில்லை ஆனால் சீக்கிரம் பணியாற்றுவேன் என நம்புகிறேன். உங்களுக்கு கிடைக்கும் ஏராளமான அன்பில் எனக்கும் இந்தப் பாடலுக்காக கொஞ்சம் கிடைக்கும் என நம்புகிறேன்.

என் அம்மா தான் என் ஆடை வடிவமைப்பாளர். என்னுடைய அனைத்தும் முதுகெலும்பும் அவர் தான். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.

+ There are no comments
Add yours