“நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப்பிடிப்பது போல் படம் எடுத்ததில்லை” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. இதுபோன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது, அதற்காக தான் குறும்படமாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். சினிமாவில் போதைப் பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான்; இது குறித்து காவல்துறை கூட அறிவுறுத்தி உள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் படங்களில் வரும் பொழுது கீழேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கார்டு போடப்படுகிறது. தற்பொழுது அதுபோன்ற காட்சிகள் சினிமாவில் குறைந்துள்ளது; போகப் போக அது குறைத்து கொள்ளப்படும். மேலும், சில இயக்குநர்கள் அதுபோன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.
சென்னையைப் போல், கோவையில் லோகேஷ் கனகராஜ் முயற்சியில் இதுபோன்ற விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் போதை பழக்கம் உடையவர்கள் தாமாக முன்வந்து திருந்த வேண்டும் என்று நினைத்தால் மட்டும்தான் திருந்த முடியும்.
நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப் பிடிப்பது போல படம் எடுத்ததில்லை. அது போன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு கார்டு போடப்படும்; ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை. ‘நானும் ரவுடிதான்’ படம் புதுச்சேரியில் எடுத்தேன்.
அந்தப் படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை. என்னால் முடிந்தவரை என்னுடைய நண்பர்கள், என் படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நானும் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகள்தான் அதிகமாக படங்கள் பார்க்கிறார்கள், அவர்களை பாதிக்காத வகையிலும், தீய பழக்கத்திற்கு கொண்டு போகாத வகையிலும் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours