“எனது படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை பார்க்க முடியாது. அதை நான் எனது எல்லா படங்களில் பின்பற்றிக்கொண்டு வருகிறேன்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைத்து நடத்தினார். 300-க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “நானும் சின்ன வயசில் போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு வாழ்க்கை வேறு பாதையைத் தந்துவிட்டது. என்னையும் காவல் துறை நண்பர்கள் நெருங்கிய வட்டத்தில் வைத்திருப்பது மிக மகிழ்ச்சி. போதை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்ன போது இந்த மாதிரி குறும்படம் எடுக்கலாம் எனச் சொன்னேன்.
கமிஷனரும் ஆர்வமாகி நல்ல முறையில் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் இந்த குறும்பட போட்டிக்கு 300-க்கும் மேலானவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினார்கள். போதைப்பொருள் விழிப்புணர்விற்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட படங்களில் 3 படங்களைத் தேர்வு செய்துள்ளோம் அவர்களுக்குப் பரிசளிப்பது மகிழ்ச்சி. எனது படங்களில் மது அருந்துவது போலவும், புகைப்பிடிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றது கிடையாது. அதை நான் பின்பற்றிக்கொண்டு தான் வருகிறேன்” என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அண்மைக்காலமாக நான் எந்த ஒரு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால் இது போதைப் பொருளுக்கெதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். போதைப்பொருளுக்கெதிரான சிறந்த முயற்சி இதை முன்னெடுத்த காவல்துறைக்கு என் பாராட்டுக்கள். ‘நானும் ரௌடிதான்’ படமெடுத்தவர் இங்கு இந்த விழாவை ஒருங்கிணைக்கிறார் அவருக்குப் பாராட்டுக்கள். இப்போதெல்லாம் நிறையத் தவறான செய்திகள் வாட்ஸப் மூலம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. இங்கு இந்த மேடையில் மாணவர்களிடம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை அறிந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
+ There are no comments
Add yours