Veerappan Daughter Vijayalakshmi Debuts As Heroine In Maaveeran Pillai | கதாநாயகியாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி

Estimated read time 1 min read

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார்.  ‘படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் இவர்களுடன் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் இயக்குனருமான KNR ராஜா பேசும்போது, “எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மதுவால் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.  இசையமைப்பாளர் ரவிவர்மா பேசும்போது, “இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக சாராயம் அபாயம் என்கிற பாடலை பாடலாசிரியர் ஆலயமணி எழுதி அவரே பாடியும் உள்ளார். இந்த படத்திற்கு நான் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளேன். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். முதல் படத்தில் கமர்சியலாக சம்பாதிக்க நினைக்காமல் இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்துள்ளார் என்றால், அவரது சகோதரர் குறைந்த வயதிலேயே மதுவால் மரணம் அடைந்த தாக்கம் தான் அதற்கு காரணம். இது தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. பல காட்சிகளில் டாஸ்மாக்கிலேயே நிஜமாக படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். 

மேலும் படிக்க | Actor Ajith’s Father Passed Away: நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் – முதல்வர் இரங்கல்!

நாயகி விஜயலட்சுமி பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்” என்று கூறினார்.

maaveeran

இயக்குனர் பேரரசு பேசும்போது, “ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம்.. வீரப்பன் மகளும் நடிக்கலாம்.. சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும்.. அந்த வகையில் வீரப்பனின் மகன் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம். தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள்.. ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை குடிப்பவர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா இவர்களை விட குடிமகன் சூப்பரா ஆடுகிறான்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்து தான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலயமணி எழுதிய சாராயம் அபாயம் என்கிற பாடல் ஒரு அபாய மணி. இந்த பாடலை டாஸ்மாக் முன்பாக ஒலிக்க விட்டு மது ஒழிப்பு பிரச்சாரம் கூட செய்யலாம். மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறினால் ஓட்டுப் போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும்போது போதைப் பொருள்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் படிக்க | சூர்யா – ஜோதிகா மும்பையில் வாங்கிய புதிய சொகுசு வீடு..! பாலிவுட் என்டிரிக்கு பிளான்

ஆன்லைன் ரம்மி மூலமாக எங்கேயோ எப்போதோ ஒன்றிரண்டு பேர் இறக்கிறார்கள்.. ஆனால் குடியால் தினசரி எத்தனையோ பேர் உடல் பாதிப்பு, விபத்து என உயிர் இழக்கிறார்கள்.. ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை.. சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம். பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை.. நீட் தேர்வை நீங்கள் ஒழிக்கிறீர்களோ இல்லையோ, அதுவரை ஏழை மாணவர்களும் மருத்துவ படிக்க படிக்க வேண்டும் என்றால் ஏன் நீங்களே மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கக் கூடாது.. சாராயம் விற்ற காசில் எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள்.. கேளிக்கை வரி என்பது கேலிக்கூத்து வரியாக மாறிவிட்டது. இந்த படம் சமுதாயத்துக்காக எடுக்கப்பட்ட படம்” என்று கூறினார்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா பேசும்போது, “வீரப்பன் உண்மையான கதாநாயகன்.. வீரப்பன் மகள் நடிக்க வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. திரைப்படம் என்றாலே பணம் சம்பாதிக்கும் துறை என்று தான் ஆகிவிட்டது. அதில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ராஜா போன்றவர்கள் தான் உள்ளே நுழைந்து சமுதாயத்தை மாற்றும் விதமாக படம் எடுக்க முடியும்.. வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் கல்வி அறிவிலும் பின்தங்கி இருக்கிறார்கள், அவர்கள் தான் அதிக அளவிலான மோசமான செயல்களிலும்  ஈடுபடுகிறார்கள்.. அவர்கள் தான் அதிக அளவிலும் மது அருந்துகிறார்கள்.. இதை அந்த வட மாவட்ட களத்தையே பின்னணியாக வைத்து படம் இயக்கி இருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று.. பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிராக பேசும்போது ஏன் அங்கே மது குறித்து பேசுவதில்லை.. வெளிநாடுகளிலும் மது விற்கிறார்கள். ஆனால் இங்கே மட்டும் அதிக சாவு ஏன் ? ஏனென்றால் இங்கே கொடுப்பதும் மது அல்ல விஷம்..” என்று கூறினார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரசியல் ரீதியாக மதுவுக்கு எதிராக ஒரு பக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களது வழியில் வந்த இந்த படத்தின் இயக்குனர் ராஜா சினிமா மூலமாக மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அதை நாம் பாராட்ட வேண்டும். வீரப்பன் ரியல் ஹீரோ. அவரது மகள் நடிக்க வந்ததை வரவேற்போம். இந்த மேடையில் நான் அதிகமாக பேசியிருக்கிறேன் என்று நினைத்து, என்மீது வழக்கு போட நினைத்தால் எனக்கு பதிலாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கே என் ஆர் ராஜா மீது வழக்கு போடுங்கள்” என்று நகைச்சுவையாக பேசினார்.

மேலும் படிக்க | KD-The Devil மாஸ் அப்டேட்: சத்யவதியாக இணைந்த பிரபல பாலிவுட் நடிகை, எகிறும் எதிர்பார்ப்பு  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours