டி.எம்.சவுந்தர்ராஜன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்: தமிழக அரசு அறிவிப்பு
23 மார், 2023 – 13:46 IST
பழம்பெறும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் கலைஞர்களை தனது வசீகர குரலால் தாங்கிப் பிடித்தவர், 10 ஆயிரம் திரைப்பட பாடல்களையும், 2500 பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
டி.எம்.சவுந்தரராஜன் 1922ம் ஆண்டு மார்ச் 24ந் தேதி பிறந்தார். அவர் கடந்த 2013ம் ஆண்டு மே 25ம் தேதி தனது 91ம் வயதில் மரணம் அடைந்தார். 24ந் தேதி (நாளை) அவரது 100வது பிறந்தநாள். இதனை போற்றும் வகையில் தமிழக அரசு சென்னை மந்தவெளியில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: டி.எம்.சவுந்தரராஜனின் 100வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையை பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours