“சமூக வலைதளங்கள் என்னை கொன்றுவிட்டன".. பதறிப்போய் வீடியோ வெளியிட்ட சாமி பட நடிகர்!

Estimated read time 1 min read

விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த கோட்டா சீனிவாசன் காலமாகி விட்டதாகச் சொல்லி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் வீடியோவாக வெளியிட்டு மறுத்திருக்கிறார்.

கோலிவுட்டில் சாமி, திருப்பாச்சி, சகுனி, கோ, ஏய், ஆல் இன் ஆல் அழகுராஜா என ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த வில்லன் நடிகர்களில் ஒருவராவார்.

75 வயதாகும் இவர் இறந்துவிட்டதாகச் சொல்லி சமூக வலைதளங்களில் வதந்திகளும், பொய்ச் செய்திகளும் பரவியதால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவரே வீடியோவில் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக கோட்டா சீனிவாச ராவ் கூறியிருப்பதாவது, “சமூக வலைதளங்கள் என்னை கொன்றுவிட்டன. மக்கள் யாரும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம். பொய்ச் செய்திகளை, வதந்திகளை பரப்புவோருக்கு மக்கள் தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும். நான் இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகவும் துரதிருஷ்டமானது.

நாளை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை கொண்டாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வேளையில்தான் இதுப்போன்ற வதந்திகள் பரப்பப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் என்னை தொடர்புகொண்டு கேட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் இடத்தில் வேறு எந்த முதியவராக இருந்தால் அவருக்கு இதயமே வெடித்திருக்கும்.

இந்த வதந்திகள் பரவியதால் என் வீட்டிற்கு தற்போது 10 காவல்துறையினர் பாதுகாப்பு நிற்கிறார்கள். பெயர், புகழை ஈட்ட எக்கச்சக்கமான வழிகள் இருக்கின்றன. ஆனால் வதந்திகளை பரப்புவதன் மூலம் அல்ல.” என கூறியிருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் என கிட்டத்தட்ட 700 படங்களில் நடித்திருக்கும் கோட்டா சீனிவாச ராவ், 1978ம் ஆண்டு பிரணாம் கரீது என்ற படத்தின் மூலம் முதல் முதலில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.  கடந்த 1990 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட கோட்டா சீனிவாச ராவ், 1999ம் ஆண்டு ஆந்திராவின் கிழக்கு விஜயவாடா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours