சென்னை:
சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசார் இரண்டு நாட்கள் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிட சென்றுள்ளனர். பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் முன்பு அங்கிருந்த கடைக்கு சென்றுள்ளனர். அந்த கடையில் இருந்தவர்கள் இரவு நேரம் என்பதால் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மூட தயாராகிக் கொண்டிருந்தனர். இருப்பினும் காவல்துறையினர் வந்துவிட்டதால் அவர்களுக்கு டிபன் கொடுத்துள்ளனர். புரோட்டோ கேட்டு வாங்கிய காவலர்கள் பாயா கேட்டு உணவக உரிமையாளரிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த உணவக உரிமையாளர்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர்.
மேலும், ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை வழி விட மறுத்து தாக்கியதாகவும், அப்போது போலீசார் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் ஓட்டலில் போலீசார் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் ஏட்டு கோட்டமுத்து, போலீஸ்காரர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீஸ்காரர்களே ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours