நடிகர் கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக கோட்டா சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.
சாமி, குத்து, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாசராவ். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான நடிகர் கோட்டா சீனிவாசராவ், கடந்த 1990ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
1994ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்குத் தொகுதியில் கோட்டா சீனிவாசராவ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, நந்தி விருதுகள், சைமா விருதுகள் என பல விருதுகளைக் குவித்துள்ள கோட்டா சீனிவாசராவ், 1978ஆம் ஆண்டு தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக சாமி 2 படத்தி நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் பரவத் தொடங்கிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக கோட்டா சீனிவாசராவ் வீடியோ பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் இத்தகைய செய்திகள் பரவத் தொடங்கிய நிலையில், தாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதால் மேற்கண்ட போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என வீடியோ பகிர்ந்து கோட்டா சீனிவாசராவ் கேட்டுக்கொடுள்ளார்.
மேலும், பொய்யான செய்திகளை பரப்புபவர்கள், மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும், இந்த போலிச் செய்தி பரவியதை அடுத்து இன்று காலை தொடங்கி 50க்கும் மேற்பட்ட நலம் விரும்பிகள் தனது உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் கோட்டா சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தனது வீட்டிற்கு வந்ததாகவும், பணம் சம்பாதிப்பதற்கு கோடிக்கணக்கான வழிகள் இருப்பதால் இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அவர கேட்டுக் கொண்டார்.
நாளை தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படும் நிலையில், அனைவருக்கும் தனது உகாதி வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராகப் பேசியதுடன், சாதீய ஆதரவு கருத்துகளைத் தெரிவித்தும், நடிகை அனுசுயா பரத்வாஜின் உடை குறித்து விமர்சித்தும் கோட்டா சீனிவாசராவ் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் – ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்!
+ There are no comments
Add yours