Pathu Thala: "அப்போ பண்ணிருந்தா `ஒத்த தல'தான் கிடைச்சிருக்கும். இப்போ `பத்து தல'!"- STR மாஸ் பேச்சு

Estimated read time 1 min read

`மாநாடு’, `வெந்து தணிந்தது காடு’ வெற்றிகளுக்குப் பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படம் `பத்து தல’.

கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான ‘மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இருப்பினும், ஒரிஜினல் வெர்ஷனின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு முற்றிலும் மாற்றப்பட்ட திரைக்கதை, மாறுபட்ட கதாபாத்திர வடிவமைப்பில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் கிருஷ்ணா. மணல் மாஃபியாக்கள் பற்றிய இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையைக் காணக் காத்திருக்கிறது.

சிம்பு – STR

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். பிரவீன் கே.எல் இப்படத்தை படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்றது. விழா மேடையில் நடிகர் சிம்பு அனல் பறக்கப் பேசினார். தன் ரசிகர்கள் தொடங்கி, படம் குறித்தும், தன் ஆன்மிகம் குறித்தும் நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார். அதன் தொகுப்பு இங்கே…

‘பத்து தல’ நாயகன் சிம்பு பேசுகையில், “இறைவனுக்கு வணக்கம். தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வணக்கம். நான் இங்க நிற்கக் காரணமாக இருக்கக்கூடிய அத்தனை ரசிகர்களுக்கும் வணக்கம். நான் வரும்போது ஒரே ஒரு விஷயம் தான் நினைச்சேன். நான் இன்னைக்கி அழக் கூடாது. சின்ன சென்டிமென்ட் சீன் பார்த்தாலே நான் அழுதுடுவேன். ஆனா இன்னிக்கு அழக்கூடாதுன்னு நினைக்கக் காரணம், ரசிகர்களான உங்களுக்கு முன்னாடி நான் அழக்கூடாது. நீங்க சந்தோஷமா இருக்கணும். இதே நேரு ஸ்டேடியமுக்குப் பல தடவை வந்திருக்கேன். அப்போ எல்லாம் மற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் கூடின கூட்டத்தைத்தான் பார்த்திருக்கேன். ஆனா, இப்போ மொத்தமா என் ரத்தங்களைப் பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்றவர் ‘பத்து தல’ படம் அமைந்த விதம் குறித்துப் பேசினார்.

“‘இறைவனை நோக்கிப் போகலாம். சினிமாலாம் வேணாம்’ன்னு இருந்த டைம்லதான் ஞானவேல் ராஜா, ‘வீட்லயே இருக்காரு, வர மாட்டேங்கறாரு’ன்னு சொன்னாரு. அப்ப நான் கஷ்டத்துல இருந்தேன். அப்பறம் அவரே கூப்பிட்டுப் படம் பண்ணலாம்ன்னு சொன்னாரு.

கௌதம் கார்த்திக்

இதுக்கு இன்னொரு முக்கியக் காரணம் கௌதம் கார்த்திக். பொதுவா தட்டிவிடத்தான் இங்க ஆள் இருக்காங்க. தட்டிக்கொடுக்க யாருமில்லை. என்னைத் தட்டிக் கொடுத்தது ரசிகர்கள்தான். கௌதம் தங்கமான பையன். ஹேட்ஸ் ஆஃப் கௌதம். இந்தப் படம் எனக்கு வெற்றியோ இல்லையோ, கௌதமுக்காக வெற்றி அடையணும்.

ஞானவேல் இந்தப் படத்துக்காக முதல்ல கூப்பிட்டபோ குண்டா இருந்தேன். அப்பறம்தான் ‘Transformation’ நடந்தது. கிருஷ்ணா வந்து உடம்பை ஏத்துங்கன்னு சொன்னாரு. ஒவ்வொரு கிலோ குறைக்கப் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். இவரு சொல்லிடுவாரு, ஆனா வெயிட் போட்டதுக்கு அப்பறம் உடனே எழுதிடுவாங்க. சிம்பு வெயிட் போட்டுட்டாரு. இனிமே ஷூட்டின் வரமாட்டாருன்னு. அப்பறம் ஒரு போட்டோ ஷூட் பண்ணோம். அதுல ஸ்கூல் பையன் மாதிரி இருந்தேன். ‘நம்ம ரசிகர்களுக்காக உன்னால திரும்ப வெயிட் போட்டு குறைக்க முடியாதா’ன்னு எனக்குள்ள கேட்டுக்கிட்டேன். அதுக்காகவே மறுபடியும் வெயிட் போட்டு அப்பறமா குறைச்சேன்.

‘பத்து தல’ விழாவில் சிம்பு

எனக்கு இந்தப் படத்துல துணை கிடையாது. எனக்குத் துணை ரசிகர்கள்தான். எனக்குப் படத்துலயும் துணையில்லை, லைஃப்லயும் துணை இல்லை. என்னோட காட்ஃபாதர் ரஹ்மான் சார். எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. அவரோட சிஷ்யனா அவர் பேரைக் கெடுக்க மாட்டேன். ஆன்மிகத்திலும் எனக்கு நிறைய சொல்லிருக்காரு ரஹ்மான் சார்!” என்றவர் இயக்குநர் கிருஷ்ணா குறித்தும் தன் அமைதியான பேச்சு குறித்தும் விவரித்தார்.

“இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. ‘தம்’ படம் அப்பவே படம் பண்ணியிருக்க வேண்டியது. ஆனா, அப்போ பண்ணியிருந்தா ‘ஒத்த தல’தான் கிடைச்சிருக்கும். இப்போ ‘பத்து தல’ கிடைச்சிருக்கு. இப்போ வரைக்கும் எந்த ஆடியோ லான்ச்சுக்கும் என்னோட அப்பா, அம்மா வந்தது இல்லை. ஆனா இன்னிக்கு வந்ததுக்குக் காரணம் ரசிகர்கள்தான்.

சமீபத்துல வந்த ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ அப்போலாம் எல்லாரும் சொன்னது, ‘முன்னாடி எல்லாம் பேசறப்ப ஒரு ஃபயர் இருக்கும். அது இப்போ இல்லைன்னு சொல்றாங்க. கரெக்ட்தான். கஷ்டத்துல இருந்தேன். அப்போ நான்தான் எனக்குத் துணை. என் ரசிகனைவிட்ட எனக்கு யாரு இருக்கா? அதனாலதான் ஃபயராகப் பேசலை. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்கள்ல என்னைப் பாராட்டி பெரிய இடத்துல நிறுத்தியிருக்கீங்க. எப்படி ஃபயராகப் பேச முடியும்? பணிஞ்சுதான் பேச முடியும். அப்போ சொன்னதுதான் இப்போவும். பேசறதுக்கு ஒண்ணுமில்ல, செயல்தான் எல்லாமே!” என்றவர் ரசிகர்களுக்காக சில வேண்டுகோள்களையும் வாக்குறுதிகளையும் முன்வைத்தார்.

‘பத்து தல’ விழாவில் சிம்பு

“ஒவ்வொரு நாளும் நமக்கு ‘Transformation’தான். எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும்தான். இனிமே ரசிகர்கள் நீங்க சந்தோஷமா இருங்க. மற்றதை நான் பார்த்துக்குறேன். டிவிட்டர்ல போய், ‘என் தலைவன் அப்படி, இப்படி எல்லாம் வருவான்டா’னுலாம் சொல்ல வேணாம். இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க. ஜாலியா சேர் போட்டு ஏசி ரூம்ல என்ஜாய் பண்ணுங்க. வந்துட்டேன், வேற மாதிரி வந்துட்டேன். விடவே மாட்டேன். உங்களை இனிமே தலைகுனிய விடவே மாட்டேன். தமிழ் சினிமா பெருமைபடுற மாதிரி நான் கண்டிப்பா நடந்துப்பேன். நான் தன்னம்பிக்கையோட சொல்றேன். உங்க தனித்தன்மையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க. மத்தவங்களுக்காக உங்களை நீங்க மாத்திக்காதீங்க! உங்களுக்காக ஒரு சர்ப்ரைஸ்…” என்றவர் ‘லூசு பெண்ணே’ பாடலைப் பாடி, மேடையில் மூன் வாக் செய்து நடமாடினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours