சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் பல பீரியாடிக் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மக்களுக்கு மத்தியிலும் பீரியாடிக் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2:
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது அமரர் கல்கியின் நாவலையை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு மிகுதியான எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
1947 – ஆகஸ்ட் 16 :
அதே சமயம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை நமது கண்முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது மற்றுமொரு பீரியாடிக் திரைப்படமான ‘1947 – ஆகஸ்ட் 16’. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்க அதை இயக்கியுள்ளார் என்.எஸ். பொன்குமார். கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரின் ஜோடியாக புதுமுக நடிகை ரேவதி அறிமுகமாகிறார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த பீரியாடிக் திரைப்படம் உருவாகியுள்ளது.
மூன்றாவது பீரியாடிக் படம்:
வரும் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 , 1947 – ஆகஸ்ட் 16 என இரண்டு பீரியாடிக் திரைப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்த்த வேளையில் நேற்று புதிதாக அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் இரண்டு அல்ல மூன்று பீரியாடிக் திரைப்படங்கள் வெளியிடப்படும் என்றும் அந்த மூன்றாவது படம் குறித்த அப்டேட் இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவல் சோசியல் மீடியாவில் நேற்று வெளியானது.
யாத்திசை:
நேற்று வெளியான அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மத்தியில் மூன்றாவது பீரியாடிக் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் பீரியாடிக் திரைப்படம் ‘யாத்திசை’. தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சேயோன், சக்தி மித்ரன், சுபத்ரா, ராஜலக்ஷ்மி, சமர், செம்மலர் மற்றும் மின்னல் முரளி திரைப்படம் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் இப்படத்தில் நடிக்கிறார். 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய இளவரசர் ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். சக்ரவர்த்தி இசைமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் யதிசாய் அகிலேஷ் காத்தமுத்து.
எனவே ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் மூன்று பீரியாடிக் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு காலகட்டங்களை குறிக்கும் பீரியாடிக் திரைப்படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
+ There are no comments
Add yours