ஹாலிவுட்டில் ‘Pulp Fiction’, ‘Kill Bill’, ‘Django Unchained’, ‘The Inglorious Bastards’, ‘Once Upon a Time in Hollywood’ போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் குவின்டின் டாரன்டினோ. தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி உலகெங்கும் ரசிகர்களைச் சம்பாதித்திருப்பவர். குறிப்பாக அவர் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரியளவில் பேசப்படும்.
இவர் தனது திரைப்பயணத்தில் 10 படங்கள் எடுத்து முடித்த பின்னரோ, அல்லது தன் 60-வது வயதிலோ சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று முன்னரே தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த 10-வது படம் அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஒரு முடிவுரையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மாதம் அவரின் 60-வது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் இதுவரை 9 படங்களை இயக்கி இருக்கும் குவின்டின் டாரன்டினோ, (Kill Bill 2 பாகங்கள் கொண்ட படம் என்றாலும் அதை ஒரே படமாகக் கருத்தில் கொண்டால்…) தற்போது 10வது படத்தை, அதாவது அவரது கடைசி படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘The Movie Critic’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 1970களில் வாழ்ந்த ஹாலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகரான பவுலின் கேலின் வாழ்க்கையை மையப்படுத்தியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஹாலிவுட்டில் நடந்த ஒரு நிஜ வரலாற்றுச் சம்பவத்தை மாற்றி வேறொரு வடிவத்தில் ‘Once Upon a Time In Hollywood’ படத்தைக் கொடுத்திருந்தார். இப்போது இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
+ There are no comments
Add yours