3/15/2023 12:41:39 AM
சென்னை: உதயநிதி ஸ்டாலின், காந்த், பிரசன்னா, ஆத்மிகா, பூமிகா சாவ்லா, சுபிக்ஷா கிருஷ்ணன், வசுந்தரா காஷ்யப், சதீஷ், சென்ராயன், மாரிமுத்து, பழ.கருப்பையா, கு.ஞானசம்பந்தம் நடித்துள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. லிபி சினி கிராஃப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்துள்ளார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். மு.மாறன் இயக்கியுள்ளார். வரும் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: ‘கண்ணை நம்பாதே’ படம் உருவான விதம் ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவால்கள் நிறைந்தது. அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்த பிறகு மு.மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரைச் சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் ஒரு எமோஷனலான லவ் ஸ்டோரி சொன்னார். வெவ்வேறு ஜானர்களில் படம் உருவாக்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அவரது முதல் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதுபோல் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருடன் நிமிடத்துக்கு நிமிடம் ஆச்சரியமும், ட்விஸ்ட்டும் இருப்பது போன்ற ஒரு கதையை உருவாக்க வேண்டுகோள் விடுத்தேன். பிறகு அவர் ‘கண்ணை நம்பாதே’ கதையைச் சொன்னார். உடனே படப்பிடிப்புக்கு கிளம்பினோம். கொரோனா லாக்டவுன், எனது அரசியல் பயணம் ஆகியவற்றால் இப்படத்தின் பணிகள் தாமதமானது. இந்த நேரத்தில் மு.மாறனுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி சொல்கிறேன். அவர்கள் மிகவும் பொறுமையாகவும், தேவையான ஆதரவையும் கொடுத்தனர். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில், பரபரப்பான சாலை ஓரங்களில் படமாக்கப்பட்டன. அனைத்து சிரமங்களையும் தாண்டி இப்படம் உலகம் முழுவதும் வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தாலும், தற்போது அந்த நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘கண்ணை நம்பாதே’ படம் ரசிகர்களை சீட்டு நுனியில் அமர வைக்கும். எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் திரைக்கு வருகிறது. சினிமாவில் இதுதான் எனது கடைசி படம். இனி முழுநேரமும் மக்கள் பணியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதால், இனி நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.
+ There are no comments
Add yours