விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்தத் தொடரில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்திருந்தார். திடீரென அந்தத் தொடரில் இருந்து அவர் விலகியதையடுத்து அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அவரும் தொடரில் இருந்து விலகுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதில், “ஆமாம்… நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலிருந்து வெளியேறிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கம்ஃபர்டபுளாக இல்லை. வரப்போகிற ஸ்டோரி லைன் எனக்கும், என் கரியருக்கும் ஏற்றதாக இல்லை. என்னை சப்போர்ட் பண்ற எல்லாருக்கும் நன்றி! என்னுடைய முடிவை மதித்ததற்கும், ஏற்றுக் கொண்டதற்கும் விஜய் தொலைக்காட்சிக்கு என் நன்றியைச் சொல்ல கடன்பட்டிருக்கிறேன்!” எனப் பதிவிட்டிருந்தார்.
கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் விக்ரமிற்கும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதற்கு முன்னர் நடித்திருந்த விஜே தீபிகாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். சமூகவலைதள பக்கங்களில் இருவரும் இணைந்து தொடர்ந்து ரீல்ஸ்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் சாய் காயத்ரி விலகியதையடுத்து அவருக்குப் பதிலாக மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலிருந்து விலகிய போது, “எனக்கு சேனலில் இருந்து தனிப்பட்ட முறையில் பிரச்னை எதுவுமில்லை. முகப்பரு இருக்கிறதுங்கிறது என்னுடைய தப்பு இல்லையே? முகம்னா முகப்பரு வரும் தானே? அதனால நான் சேனலையும் தப்பு சொல்ல மாட்டேன். அவங்க என் ட்ரீட்மென்ட்டுக்கு நிறைய டைம் கொடுத்தாங்க. என்னால அதுக்குள்ள முகப்பருவைச் சரிசெய்துக்க முடியாததனாலதான் அந்தத் தொடரில் இருந்து விலக வேண்டியதாகிடுச்சு!” எனக் கூறியிருந்தார்.
இது குறித்து தெரிந்து கொள்ள தீபிகாவைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
+ There are no comments
Add yours