முன்னதாக, ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை நடிகை தீபிகா படுகோன் வழங்கினார். அனைவரின் கரகோஷத்துடனும் ஆராவாரத்துடனும் மேடையில் அந்தப் பாடல் அரங்கேறியது. பாடகர்கள் மற்றும் பல்வேறு நடனக்கலைஞர்கள் உற்சாகத்துடன் அதை மேடையில் அரங்கேற்றினர்.

விழா மேடையில் இசையமைப்பாளர் கீரவாணி பேசுகையில், “‘தி கார்பெண்டர்ஸ்’ (அமெரிக்க இசைக்குழு) பாடல்களைக் கேட்டுத்த்தான் நான் வளர்ந்தேன். இன்று ஆஸ்கர் மேடையில் இருக்கிறேன்” என்றவர் அந்த இசைக்குழுவின் ‘Top of the World’ என்ற பாடலைப் பாடினார்.
தொடர்ந்து பேசியவர், “எனக்கு என மனதில் ஒரேயொரு ஆசைதான் இருந்தது. ராஜமௌலிக்கும் அதுவே இருந்தது, என் குடும்பத்துக்கும் அதுவே இருந்தது. ‘RRR’ படம் வெல்லவேண்டும், இந்தியர்களின் பெருமையான படைப்பு இது. இந்த வெற்றி என்னை இந்த உலகின் உச்சியில் (‘Top of the World’) நிறுத்தும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படாத ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை ஆஸ்கரில் பங்கேற்கச் செய்ய இயக்குநர் ராஜமெளலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். உலகம் முழுவதும் பல முக்கிய இயக்குநர்கள் மற்றும் திரையுலகினருக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காண்பித்து வந்தார். அந்த முயற்சிகளின் பலனாக இன்று ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.

+ There are no comments
Add yours