சென்னை: தான் அரசியலுக்கு வராமல் போனதற்கான காரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் புதிய விளக்கம் அளித்துள்ளார். மேலும், கடவுள் இல்லை என மறுப்பவர்களைக் கண்டால் சிரிப்பாக உள்ளது எனவும் அவர் பேசியுள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “எனக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. அதற்காக தீவிரமாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் அரசியலுக்கு வரலாம் என திட்டமிட்டிருந்தேன். எதிர்பாராத விதமாக கரோனா பரவலின் இரண்டாவது அலை அப்போது தொடங்கி, அது படிபடியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அரசியலுக்கு வருவேன் என சொல்லிவிட்டேன். அந்த முடிவிலிருந்து பின்வாங்கவும் முடியாது.
அப்போது என் மருத்துவர் என்னிடம் நீங்கள் பொதுமக்களை சந்திப்பதோ, பிரசாரத்திற்கு செல்வதோ கூடாது என எச்சரிக்கை விடுத்தார். அப்படியே நீங்கள் சென்றாலும் 10 அடி தூரம் தள்ளி நிற்கவேண்டும், மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றார். மக்களிடம் தள்ளி நின்று எப்படி பிரசாரம் செய்வது, மக்களை சந்திக்காமல் எப்படி இருக்க முடியும் என யோசித்தேன். கரோனோ உச்சத்திலிருந்து நேரம் அது. அதனால்நான் மிகவும் யோசித்துகொண்டிருந்தேன். இதை நான் வெளியே சொன்னால், ‘அரசியலைக் கண்டு ரஜினி பயந்துவிட்டார்’ என சொல்வார்கள். அப்போது இதை மருத்துவரிடம் கூறும்போது, ‘யாரிடம் சொல்லவேண்டும், நானே சொல்கிறேன்’ என கூறினார். அதன்பின்னர் தான், நான் அரசியலுக்கு வரவில்லை என கூறினேன்.
உப்பை அதிக அளவில் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். என் வீட்டுக்கு புதிதாக வந்த சமையல்காரர் சிறப்பாக சமைத்தார். ஆனால், எனக்கும் என் மனைவிக்கும் பிபி ஏறிக்கொண்டிருந்தது. வீட்டில்தான் சாப்பிடுகிறேன். பின்னர் ஏன் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது என புரியாமலிருந்தேன். பின்னர் தான் தெரிந்தது அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்திகிறோம் என்பது.
இந்த மனித உடல் என்ன ஓர் அற்புதமான வடிவமைப்பு. ஆச்சரியமாக உள்ளது. பிறந்ததிலிருந்து 80 ஆண்டுகள் வரை இதயம் ‘லப் டப்’ என துடித்துக் கொண்டிருக்கிறது. இதை எந்த எந்திரத்தாலும் செய்ய முடியுமா? இந்த விஞ்ஞானிகள் இருக்கிறார்களே ஒரு துளி ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியுமா? இதெல்லாம் தெரிந்திரும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அதை பார்த்தால் சிரிப்பதா? அழுவதா தெரியவில்லை” என்றார்.
+ There are no comments
Add yours