ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) நடனமாட உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், ராம் சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடி வசூலை குவித்து படம் ‘ஆர்ஆர்ஆர்’. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு அண்மையில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது.
இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற இருக்கிறது.
இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடனமாடுவார்கள் என்ற செய்தி பரவி வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் நடனமாடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு பதிலாக அமெரிக்க நடனக் கலைஞரான லாரன் காட்லீப் நடனமாடுவார் என தெரியவந்துள்ளது.
இதனை அவரே உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் ஆஸ்கர் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட இருக்கிறேன். உலகின் மிகவும் மதிப்புமிக்க மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours