நடிகர் மயில்சாமியின் மகன் அருமைநாயகத்துக்கும் துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் எனப் பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கு.பிச்சாண்டியின் மகளைத்தான் மயில்சாமியின் மகன் திருமணம் செய்துள்ளார் என்பதையே மயில்சாமி மறைவிற்குப் பிறகுதான் பலரும் அறிந்து புருவம் உயர்த்தினார்கள். அந்தளவிற்கு, தனது சம்பந்தி குறித்து வெளிக்காட்டாமல் இருந்து வந்தவர் மயில்சாமி. இந்த நிலையில், கு.பிச்சாண்டியைத் தொடர்புகொண்டு பேசினேன்.
“எனது சம்பந்தி மயில்சாமி ரொம்ப நல்ல மனிதர். மகளைக் கொடுத்துவிட்டோம், நெருங்கிய உறவினராகிவிட்டார் என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவர். மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். நாங்கள் சம்பந்தி ஆவதற்கு முன்பே எனக்கு அவரை நன்கு தெரியும். திருவண்ணாமலை தீபத்திற்குத் தவறாமல் வந்துவிடுவார். என்னிடமும் குடும்பத்தினரிடமும் மரியாதையாக நடந்துகொள்வார். எனது மகளை அவரது வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு எப்படி நடந்துகொண்டாரோ, அதேபோல்தான் திருமணத்திற்குப் பிறகும் எங்களிடம் நடந்துகொண்டார். எப்போதும் ஒரேமாதிரியான அன்பைத்தான் செலுத்துவார். எனது சம்பந்தி என்று எங்கும் பெரிதாகக் காட்டிக்கொண்டதில்லை. ஏனென்றால், அவரே சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், பக்தர். அவரது இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு” என்கிறார் வருத்தமுடன்.
+ There are no comments
Add yours