விஜயகாந்துக்கு பிரமாண்ட பாராட்டு விழா – விஷால் திட்டம்
09 மார், 2023 – 13:48 IST
விஷால் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. இதில் ரிது வர்மா, அபிநயா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சைதாப்பேட்டை அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது : சினிமாவில் இயக்குனராகும் கனவில் வந்து நடிகன் ஆகி மீண்டும் இயக்குனராகி இருக்கிறேன். அதேபோல நடிகனாகும் கனவில் வந்து இயக்குனராகி மீண்டும் நடிகராகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. நாங்கள் இப்போது சொந்த சகோதர்களைப்போல மாறிவிட்டோம். அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
ரசிகர்களின் சிரிப்பு, கைதட்டலுக்காகவே சினிமாவில் உழைக்கிறேன். 38 நாட்கள் வலியோடு சண்டை காட்சியில் நடித்தேன். உங்களை பார்க்கும்போது வலி பறந்துபோனது. எனது படப்பிடிப்பில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறுகிறார்கள். முழுமையான பாதுகாப்போடுதான் படப்பிடிப்பு நடக்கிறது. நான் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாது. என்றாலும் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்.
எனது திருமணம் பற்றி கேட்கிறார்கள். அதற்கு நான் அவசரப்படவில்லை. அதற்கு நேரமில்லை. அது நடக்கும்போது நடக்கும். நான் பிரமிப்பிப்பாக பார்க்கும் பெண் என் அம்மாதான். என்னைப்போன்ற ஒரு மகனை வளர்க்க அவர்கள் நிறைய சிரமப்பட்டிருப்பார்கள். சினிமாவிற்கு புதிதாக வருகிறவர்களுக்கு பொறுமை வேண்டும். வந்த மறுநாளே சூப்பர் ஸ்டார் ஆகிவிடவேண்டும் என்று நினைக்க கூடாது.
அடுத்து என் முன் இருக்கும் முக்கியமான பணிகளில் ஒன்று நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடிப்பது. பணிகள் முடிந்ததும் முதல் நிகழ்ச்சியாக இதற்கு மூல காரணமாக இருந்த விஜயகாந்துக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்துவதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
+ There are no comments
Add yours