மொத்த படமுமே துறைமுகத்திற்குள்ளும், கடலுக்குள்ளும் மட்டுமே நடக்கிறது. முதற்பாதியில், துறைமுக நடைமுறைகள், சரக்குக் கப்பல்களில் கன்டெய்னர் அடுக்கும் முறைகள், தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளோரின் பணிகள் எனப் புதிய கதைக்களத்தின் வழியாகத் திரைக்கதை நகர்கிறது. ஒரு சராசரி அடியாள், ஒரு தாதாவாக மாறச் செய்யும் புத்திசாலித்தனமான முயற்சிகள், ஆக்ஷன் சாகசங்கள், சம்பிரதாய காதல் காட்சிகள் எனப் பழகிய ரூட்டுதான் என்றாலும், வித்தியாசமான கதைக்களத்தால் அவை ரசிக்கும்படியாக மாறுகின்றன. அதேநேரம், புதுமையான காட்சிகளோ திருப்பங்களோ இல்லாததால், சிறிது நேரத்திலேயே அந்தப் புதிய கதைக்களமும் அலுப்புத்தட்டத் தொடங்கிவிடுகிறது.
முதற்பாதியில், ஒரு மையத்தை நோக்கி ஓடுவது போலத் திரைக்கதை இருந்தாலும், இரண்டாம் பாதியில் சகட்டுமேனிக்கு இலக்கற்றுச் செல்கிறது படம். ஒரு டாஸ்க், அதன் முடிவு, பின்னர் ஒரு டாஸ்க், அதன் முடிவு எனக் கோர்வையற்று, துண்டு துண்டாகப் பயணிக்கும் காட்சிகளால், படத்தோடு பெரிதாக ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியில் வரும் கதாநாயகனுக்கான பின்கதையும் ஒரு ‘பாரம்பரிய பிளாஷ்பேக்’ வகையறாதான். ஒரு சர்வதேச குற்றவாளியைச் சட்டவிரோதமாக கன்டெயினரில் மறைத்துக் கடத்த கதாநாயகன் எடுக்கும் முயற்சிகளும், அது படமாக்கப்பட்ட விதமும் ஒரு நல்ல ட்ரீட். இவ்வகையில், ஆங்காங்கே சில ட்ரீட்கள் மட்டுமே கவனிக்க வைக்கின்றன.
+ There are no comments
Add yours