அண்ணாநகர் முதல் தெரு: ‘என்னமோ போடா மாதவா’ கலக்கிய சத்யராஜ் – ஜனகராஜ் கூட்டணி; கவனிக்க வைத்த ரீமேக்!

Estimated read time 1 min read

மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நகைச்சுவைப்படங்களுக்கு ஒரு தனியான ருசியுண்டு. சத்யன் அந்திக்காடின் படங்கள் அப்படியொரு பிரத்யேக சுவையைக் கொண்டவை. அவர் மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றியைப் பெற்ற ‘காந்திநகர் 2வது தெரு’, என்கிற திரைப்படம், ‘அண்ணாநகர் முதல் தெரு’ என்கிற தலைப்பில் தமிழில் வெளிவந்தது. மலையாளத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், கார்த்திகா, சீமா ஆகியோர் ஏற்றிருந்த பாத்திரங்களை, தமிழில் முறையே சத்யராஜ், ஜனகராஜ், ராதா, அம்பிகா ஆகியோர் ஏற்று நடித்தனர். அங்கே கௌவர வேடத்தில் மம்மூட்டி நடித்த பாத்திரத்தை இங்கு பிரபு நடித்துச் சிறப்பித்தார்.

மலையாளத் திரைப்படங்களின் நகைச்சுவை தனித்துவமானது. திகட்டாத அளவில் இயல்பான தொனியில் இருக்கும். அந்தப் பாணியைத் தமிழுக்கு ஏறத்தாழ கடத்திக் கொண்டு வந்திருந்தார் இயக்குநர் பாலு ஆனந்த். பல இடங்களில் தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு சுவையைத் தூக்கலாகக் கூட்டியிருந்தார். தமிழ் வடிவத்தின் முக்கியமான அம்சமே சத்யராஜ் + ஜனகராஜ் கூட்டணி அடித்த நகைச்சுவை லூட்டிதான். படம் முழுவதும் இவர்கள் வந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.

அண்ணாநகர் முதல் தெரு

“ஏண்டா மாதவா… உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா…” என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சியுடன் ஜனகராஜ் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்தத் திரைப்படம் முழுக்கவும் நகைச்சுவையாக அல்லாமல் தீவிரத் தொனியும் கலந்து வித்தியாசமாக அமைந்திருந்தது.

அண்ணாநகர் முதல் தெரு – கதைப் பின்னணி

வேலை கிடைக்காமல் சிரமப்படும் சிவராமன் (சத்யராஜ்), தன் நண்பன் மாதவனைத் (ஜனகராஜ்) தேடி சென்னைக்கு வருகிறான். ‘தன் வீட்டில் அவன் நிரந்தரமாகத் தங்கி விடுவானோ’ என்று அச்சப்படும் மாதவன், நண்பனை வெளியில் கிளப்புவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறான். கடைசியில் தன் அலுவலகம் அமைந்திருக்கும் காலனியில் ‘காவலாளி’ வேலை வாங்கித் தருகிறான். ‘கூர்க்கா’வாக மாறி ஒருவழியாக வேலையில் நிலைபெறும் சிவராமனுக்கு ஓர் அதிர்ச்சி. அவனுடைய முன்னாள் காதலியான லதா (ராதா), அங்குக் குடிவருகிறாள். ஒரு பிரச்னையால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இவனைத் தெரிந்தது போலவே லதா காட்டிக் கொள்ளாததால் சிவராமன் மனம் உடைந்து போகிறான். அவனுடைய வேலையில் வேறு பிரச்னைகளும் சேர்கின்றன. மாறுவேடம் கலைகிறது. எனவே அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்கிறான்.

சிவராமன், லதா காதலின் பின்னணி என்ன, ஏன் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது, இறுதியில் என்னவாயிற்று என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

அண்ணாநகர் முதல் தெரு

சத்யராஜ் + ஜனகராஜ் – இணைந்து கலக்கிய நகைச்சுவைக் கூட்டணி

சிவராமன் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சத்யராஜ். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு ‘மாதவா… நான் உங்க கூடயே தங்கிக்கறண்டா’ என்று சொல்லிப் பார்ப்பதும், தன்னை ஊருக்குக் கிளப்புவதற்காக ஜனகராஜ் விதம் விதமாகச் சொல்லும் டகால்ட்டி பொய்களைச் சிரித்துக் கொண்டே முறியடிப்பதும், இழந்த காதலை எண்ணி வருந்துவதும், கூர்க்கா வேடத்தில் ரகளை செய்வதும் என்று தன்னுடைய பங்களிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார். அவருடைய வாட்டசாட்டமான உடம்பு இந்த வேடத்திற்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ‘பீம்சிங்கா பேட்டா ராம்சிங்’ என்று கூர்க்கா வேடத்தில் இந்தியைக் கொத்துப் பரோட்டா போடுவதெல்லாம் சுவாரஸ்யம். அரையும் குறையுமான இந்தியில் தமிழையும் கலந்து எதையாவது சொல்லி விட்டு பின்பு தயக்கத்துடன் ‘ஹை…’ என்று பின்குறிப்பாக இறுதியில் சேர்த்துச் சொல்வது சுவாரஸ்யமான காமெடி.

ஹீரோவிற்கு நிகராக அல்லது அவரையும் மிஞ்சி விடும் காமெடி நடிகர்கள் அமைவது அரிதான விஷயம். ஜனகராஜின் திரைப்பட வரிசையில் ‘மாதவன்’ கேரக்ட்டர் பார்வையாளர்களின் நினைவிலிருந்து அகலவே அகலாது. தன் பால்ய நண்பன் மீது மாதவனுக்கு உள்ளூர நட்பும் அன்பும் உண்டுதான். ஆனால், ‘சொற்ப வருமானத்தில் தன்னுடைய குடும்பமே சிரமப்படுகிறதே’ என்கிற எண்ணம் காரணமாக நண்பனின் வருகையைச் சுமையாகக் கருதுகிறான். நகர வாழ்க்கை எப்படி ஒருவனைச் சுயநலம் மிக்கவனாக மாற்றிவிடுகிறது என்பதற்கு மாதவன் ஒரு நல்ல உதாரணம். இந்தப் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஜனகராஜ்.

அண்ணாநகர் முதல் தெரு

சிவராமனை மாதவன் வெளியில் அனுப்ப முயற்சி செய்வதற்குக் காரணம் பொருளாதாரச் சுமை மட்டுமல்ல. அழகான தங்கைக்கு அண்ணனாக இருப்பதும் ஒரு காரணம். சத்யராஜுடன் இயல்பாகப் பழகும் தன் தங்கையிடம் ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்று அடிக்கடி எச்சரிப்பதாகட்டும், “டேய் மாதவா… அவனும் நம்ம கூட இருந்துட்டுப் போகட்டுமே” என்று அம்மா சொல்லும் போது, “உனக்கு ஒண்ணும் தெரியாது. பேசாம இரு” என்று எரிந்து விழுவதாகட்டும், சத்யராஜை வீட்டிலிருந்து கிளப்புவதற்காக விதம் விதமான ஐடியாக்களை யோசித்துச் செயல்படுத்தும் போதெல்லாம் “மாதவா… பின்றியடா… என்னமோ போடா” என்று தன்னையே பாராட்டிக் கொள்ளும் பாணி ஆகட்டும்… அனைத்துமே ரசிக்கத்தக்கதாக இருந்தன. ‘பெங்களூருக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு” என்று ஒரு ‘திடீர்’ பொய்யை உருவாக்கிவிட்டு சினிமா தியேட்டருக்கு செல்வதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போது வாசலில் சத்யராஜ் படுத்திருப்பதைப் பார்த்து எரிச்சலும் அதிர்ச்சியும் கொள்வதும் புன்னகையை வரவழைக்கும் காட்சிகள்.

திருடன் கிடைத்தால்தான் சத்யராஜின் ‘கூர்க்கா’ வேலை பறிபோகாமல் இருக்கும் என்பதற்காகத் தன்னையே திருடனாக மாற்றிக் கொண்டு ஜனகராஜ் செய்யும் லூட்டி சுவாரஸ்யமாக இருந்தது. கடைசியில் “உன்னையே பின்னிட்டாங்களே மாதவா… என்னமோ போடா…” என்று பரிதாபமாக முனகுவது நகைச்சுவையின் உச்சம்.

அண்ணாநகர் முதல் தெருவின் குடியிருப்புவாசிகள்

ஒரு காலனியில் நடக்கும் கதை என்பதால் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தார்கள். “நான்தான் இந்தக் காலனியோட செக்ரட்டரி. எதுவா இருந்தாலும் நான்தான் திறந்து வைப்பேன்” என்று வெட்டி பந்தா செய்யும் ‘செக்ரட்டரி’ பாத்திரத்தில் சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் மனோரமா. குடிகார புரொபசராக ரகுவரனுக்குச் சிறிய பாத்திரம்தான். தன்னை விட்டுச் சென்ற மனைவியைப் பற்றிக் குடிபோதையில் சத்யராஜிடம் புலம்பும் காட்சியில் அசத்தியிருந்தார். கதைக்காக அல்லாடும் ‘கதாசிரியர்’ பாத்திரத்தில் தன் பிரத்யேக நகைச்சுவையைத் தந்திருந்தார் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. ஒருவரைப் பற்றி வில்லங்கமாகப் புறணி வசனம் பேசி விட்டு, “அய்யோ… எழுதும் போதெல்லாம் இப்படிச் சிறப்பா வரமாட்டேங்குதே” என்று இவர் கிளுகிளுப்பாக அலுத்துக் கொள்வது நகைச்சுவையான காட்சி.

அண்ணாநகர் முதல் தெரு

சத்யராஜின் வறுமையைப் புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவு தரும் ‘டீச்சராக’ கண்ணியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் அம்பிகா. ‘சத்யராஜ் ஒரிஜினல் கூர்க்கா அல்ல’ என்பதைத் தெரிந்து கொண்டு ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… பாட்டைப் பாடு’ என்று குறும்பாகக் கேட்பதும், அதற்கு, ‘க்யா… நல்லி… நல்லி…’ என்று சத்யராஜ் சமாளிப்பதும் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் காட்சி. அம்பிகாவின் துபாய் ரிட்டர்ன் கணவராக ‘சர்ப்ரைஸ் விசிட்’ தந்து சிறப்பாக நடித்திருந்தார் பிரபு. தன் மனைவியை காலனி மக்கள் அவதூறாகப் பேசுவதை முதலில் நம்புவது போல் நடித்து, பிறகு அவர்களுக்கே பாடம் கற்றுத் தரும் காட்சி அருமையானது.

சத்யராஜின் காதலியாக ராதா. எந்த உடை என்றாலும், அதில் கொள்ளை அழகுடன் தோன்றும் நடிகைகளில் ஒருவர். வறுமையில் வாடும் சத்யராஜிடம் காதலில் விழுவதும், பணம் தந்து உதவுவதும், ‘மணிப்புறா’ பொம்மைகளைத் தந்து தன் காதலை உறுதி செய்வதும், பிறகு சில வருடங்கள் கழித்து சத்யராஜைப் பார்க்கும் போது அந்நிய ஆசாமி போலக் கையாள்வதும் என்று அவசியமான நடிப்பைத் தந்திருந்தார். இவர் ஏன் சத்யராஜைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்கிற ரகசியம் வெளிப்படும் இடம் நாடகத்தன்மையுடன் இருந்தது. ‘காதலர்கள் இணைவார்களா, மாட்டார்களா’ என்கிற சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியில் ராதாவின் நடிப்பு குறிப்பிடத்தகுந்தது.

சத்யராஜுக்கும் ராதாவுக்கும் பிரிவு ஏற்படுவதற்குக் காரணமாக ஒரு வில்லங்கமான சம்பவத்தைச் சித்திரித்திருப்பார்கள். மகா கொடுமையான, விரசமான காரணம் அது. வேறு சிறந்த காரணத்தை யோசித்திருக்கலாம்.

அண்ணாநகர் முதல் தெரு

‘மெதுவா… மெதுவா… ஒரு காதல் பாட்டு!’ – அருமையான மெலடி

தமிழ்த் திரையிசையில் அதிகம் கவனிக்கப்படாமல் போன அருமையான இசையமைப்பாளர்களுள் ஒருவர் சந்திரபோஸ். ‘அண்ணாநகர் முதல் தெரு’ அவரின் திறமைக்குச் சாட்சியமாக இருக்கும் ஆல்பங்களில் ஒன்று. இதில் அனைத்துப் பாடல்களுமே ‘ஹிட்’ ஆனது. குறிப்பாக, ‘மெதுவா… மெதுவா… ஒரு காதல் பாட்டு!’ என்கிற அற்புதமான பாடல், சந்திரபோஸிற்குப் பெயர் வாங்கித் தந்ததில் ஒன்று. எஸ்.பி.பியும் சித்ராவும் இதை உயிரோட்டத்துடன் பாடியிருப்பார்கள். கூர்க்காவாகப் பணிபுரியும் சத்யராஜ், சில வருடங்கள் கழித்து ராதாவைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்பார். கட் செய்தால் இந்தப் பாடலுடன் பிளாஷ்பேக் தொடங்கும். மான்டேஜ் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் வரும் ஒரு சிறிய காட்சி சுவாரஸ்யமானது. ஹோட்டலில் சர்வருக்கு ராதா டிப்ஸ் வைத்து விட்டுச் செல்ல, வறுமையில் இருக்கும் சத்யராஜ் அந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு தன்னிடமிருக்கும் நாணயத்தை வைக்க, சர்வரோ தலையில் அடித்துக் கொண்டு ‘அதையும் நீயே எடுத்துச் செல்’ என்று அனுப்பிவிடுவார்.

‘என்ன கதை சொல்லச் சொன்னா’ என்கிற பாடல் சோகச்சுவையுடன் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ‘தீம் தனக்குதீம்’ என்பது இந்தி வார்த்தைகள் கலந்த ஜாலியான குத்துப்பாடல். இரண்டையும் தனக்குரிய பாணியில் பாடியிருப்பார் எஸ்.பி.பி. ‘ஏ… பச்சக்கிளி’ என்ற பாடம் சுவாரஸ்யமான தாளக்கட்டுடன் உருவாக்கப்பட்டது. மலேசியா வாசுதேவனும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். வாலி மற்றும் புலமைப்பித்தன் ஆகிய இருவரும் பாடல்வரிகளை எழுதினார்கள்.

பாலு ஆனந்தின் இயக்குநர் பயணத்தின் மைல்கல்

இந்தப் படத்தை இயக்கியவர் பாலு ஆனந்த். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனிடம் ‘பயணங்கள் முடிவதில்லை’யில் ஆரம்பித்து ஏராளமான திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘நானே ராஜா. நானே மந்திரி’ வித்தியாசமான நகைச்சுவைத் தன்மையைக் கொண்டது. சத்யராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்களை ஹீரோவாகக் கொண்டு திரைப்படங்களை இவர் இயக்கினாலும் அவற்றில் பல படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இயக்குநர்கள் நடிகர்களாக மாறிய வரிசையில் பாலு ஆனந்த்தும் பிறகு இணைந்தார். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராகப் பல படங்களில் நடித்தார். 2016-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாகக் காலமானார். பாலு ஆனந்த் இயக்கிய ரீமேக் திரைப்படங்களில் இது முக்கியமானது எனலாம்.

அண்ணாநகர் முதல் தெரு

‘அண்ணாநகர் முதல் தெரு’ – இதுவொரு மகத்தான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மறக்க முடியாத ஒரு ஃபீல் குட் படம் என்று சொல்லலாம். மலையாளத்திலிருந்த இயல்புத்தன்மை கலைந்து தமிழிற்காகக் கூடுதல் சுவை சேர்க்கப்பட்டிருந்தாலும் சத்யராஜும் ஜனகராஜும் இணைந்து கலக்கும் ‘என்னமோ போடா மாதவா’ நகைச்சுவைக் காட்சிகளுக்காக நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours