சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு காக்கம்பாடியை சேர்ந்த பழனிகவுண்டர் மகன் சிவக்குமார் (வயது 40). மர வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஏற்காடு காக்கம்பாடி பகுதியில் கந்துவட்டி தொழில் செய்து வருபவரிடம் புரோக்கர் மூலம் எனது மாமனார் 2 அசல் பத்திரங்களை கொடுத்து ரூ. 10 லட்சம் வாங்கினார். தற்போது வட்டி மற்றும் அசலை கட்டிவிட்டார்.
இதையடுத்து அசல் பத்தி ரத்தை திருப்பிக்கொடுங்கள் என்று நானும், மாமனாரும் கேட்டு வந்தோம். அவர் கொடுக்காமல் காலம் கடந்தி வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல் தோட்டத்தில் வைத்திருந்த காப்பி கொட்டையை நான் திருடியதாக பொய்யாக கூறி மரத்தில் கட்டிவைத்து என்னை அடித்து துன்புறுத்தினார்கள். பின்னர் துப்பாக்கியை நெஞ்சில் வைத்து சுட்டுவிடுவேன் எனவும் மிரட்டினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து எனது மாமனார் மற்றும் மாமியார் அந்த இடத்திற்கு வந்து ஏன் அடிக்கின்றீர்கள் என்று கேட்டனர். அவர்களையும் மிரட்டிவிட்டு என்னை ஏற்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை செய்துவிட்டு, நான் திருடியிருக்க மாட்டேன் எனக்கூறி என்மீது புகார் எதுவும் பதிவு செய்யாமல் எனது மாமனார், மாமியாருடன் அனுப்பி வைத்தார்.
தற்போது நான் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எந்த தவறும் செய்யாத என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இதே புகார் மனுவினை சிவக்குமார் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பி உள்ளார்.
+ There are no comments
Add yours