சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த அரசாணை காலாவதியாகிவிட்டதால், இரு வாரங்களில் புதிதாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கு தொடர்ந்துள்ள நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலன் கருதியே முடிவுகளை எடுக்கின்றனர். சங்க உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த அரசாணை காலாவதியாகிவிட்டதால், இரு வாரங்களில் புதிதாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சங்கத்தின் கணக்குகளை முறைப்படுத்தி, உறுப்பினர் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என சிறப்பு அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours