ஹைதராபாத்: இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு படபிடிப்பின்போது காயம் ஏற்பட்டது. இதில் அவரது வலது பக்க விலா எலும்பு உடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது பிளாக் தளத்தில் அவரே தெரிவித்துள்ளார்..
நடிகர் பிரபாஸ் உடன் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தின் படப்பிடிப்பில் 80 வயது அமிதாப் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், சண்டைக் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் அமிதாப் காயமடைந்துள்ளார். இதில்தான், விலா எலும்பு பகுதியில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
“ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஷூட்டில் சண்டைக் காட்சியின் போது நான் காயமடைந்தேன். வலது பக்க விலா எலும்பு உடைந்துள்ளது. தசைப் பகுதியில் சிதைவு ஏற்பட்டுள்ளது. ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இந்த விவரம் தெரிந்தது. மருத்துவரின் பரிந்துரை படி தற்போது வீடு திரும்பி உள்ளேன்.
அசையும் போதும், சுவாசிக்கும்போதும் வலிக்கிறது. எப்படியும் இயல்பு நிலைக்கு திரும்ப சில வார காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் பூரணமாக குணம் அடையும் வரையில் அனைத்து பணிகளையும் தள்ளி வைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ப்ராஜெக்ட் கே படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவரை வைத்து ‘வினாடி வினா’ போன்ற நிகழ்வை நடத்த ஜியோ திட்டமிட்டு இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
+ There are no comments
Add yours