அயோத்தியில் வாழும் யஷ்பால் சர்மா தீபாவளியன்று புனித யாத்திரையாக தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் வருகிறார். மதுரை டு ராமேஸ்வரம் டாக்ஸி பயணத்தின்போது யஷ்பால் சர்மாவின் பொறுப்பில்லாத தனத்தால் பெரும் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் அவரின் மனைவி இறந்துவிட, மொழிப் புரியாத இடத்தில் திக்கற்று நிற்கிறது குடும்பம். மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். தன் நண்பர்களின் ஆதரவுடன் சசிகுமார் அந்தக் குடும்பத்தைச் சிக்கலிலிருந்து மீட்டாரா, பொது மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சட்டம், சமயத்தில் அவர்களை எப்படியெல்லாம் நெருக்குகிறது, சுழற்றியடிக்கிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி.
அடிதடி சண்டை, நட்பு மற்றும் சொந்தங்களின் துரோகம் போன்ற தன் வழக்கமான பார்முலாவிலிருந்து விலகி, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் நடிகனாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறார் சசிகுமார். ஹீரோயிஸம் காட்டுவதற்கான வெளியிருந்தும் அந்தப் பக்கம் செல்லாமல், யதார்த்தமாகவே அவரின் பாத்திரம் பயணித்திருப்பது சிறப்பு. கதையின் நாயகியாக வரும் பிரீத்தி அஸ்ரானி தன் நடிப்பால் அசரடிக்கிறார். ‘வென்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியுமா’ என்று கலங்கியவாறே சசிகுமாரிடம் அவர் கேட்கும் காட்சி ஒரு சோற்றுப் பதம். இறுதியில் அதுவரை தன்னை ஒடுக்கியே வைக்கும் தந்தையின் பிடிவாத குணம், ஆண் என்னும் திமிர் போன்றவற்றை எதிர்க்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். பிரீத்தி, தமிழ் சினிமாவுக்கு நல்வரவு!
+ There are no comments
Add yours