3/2/2023 1:07:15 AM
நாக்பூர்: பாலிவுட் முன்னணி நடிகர்கள் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரின் வீடுகளுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய ஒரு மர்ம நபர், ‘பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட பிரபலங்களின் வீடுகளை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக 25 பேர் தாதருக்கு வந்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துவார்கள்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து மும்பை போலீசை தொடர்புகொண்ட நாக்பூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வீடுகளுக்கு வெடிகுண்டு தடுப்புப் படையினருடன் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படி எந்தப் பொருளும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. எனினும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours