ஈரோடு:
Erode East Bypoll Results 2023: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜன. 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
தொடர்ந்து இந்த தேர்தலின் வாக்குபதிவு பிப். 27ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை செலுத்தினர். அவ்வபோது வாக்குபதிவு பதிவு சதவீதம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது அதன் பிறகு 238 வாக்கு சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களுடைய வாக்கு வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தளங்களில் இந்த 16 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தரை தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் ஆறு மேஜைகளும், அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கை என்பது 15 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் முழுவதுமாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டும் 600 காவல் துறை மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட இருக்கிற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.
+ There are no comments
Add yours