‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடித்திருந்த நேரம். அடுத்த உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பித்து ஒரு பகுதி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இடையில் வந்ததுதான் ‘நாயகன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு. கமல் என்னும் தங்க முட்டை கிடைத்தது. இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதில் சிரமம் இருந்ததால், அக்னி நட்சத்திரத்தை ஒத்திப் போட்டு விட்டு ‘நாயகனில்’ கவனம் செலுத்தினார். நாயகன் முடிந்தவுடன், அதாவது ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு ‘அக்னி நட்சத்திரத்தை’ மீண்டும் கையில் எடுத்து உருவாக்கி முடித்தார். மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட மகத்தான கூட்டணி, இளைய தலைமுறைக்கு ஏற்றவாறான ஒரு திரைப்படத்தைப் புத்துணர்ச்சி குறையாமல் தந்திருந்தது.
‘அக்னி நட்சத்திரம்’ – சகோதர யுத்தத்தின் உஷ்ணம்
விஸ்வநாத் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்குப் பிறந்தவன் கௌதம். இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகனும் மகளும். (அசோக், மல்லிகா) மனைவிகள் இருவரும் மௌனமாகச் சண்டையிட்டு ஒருவரையொருவர் தவிர்த்துக் கொள்கிறார்கள். மிக அமைதியாக நிகழும் சக்களத்திச் சண்டை. ஆனால் இதற்கு மாறாக இரண்டு மகன்களும் எலியும் பூனையும் போலப் பார்த்த இடத்தில் எல்லாம் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். இந்த விரோதமும் குரோதமும் ஊதுவத்தி புகை போலப் படம் முழுவதும் கமழ்ந்து கொண்டே இருக்கிறது.
இரு துருவங்களாகப் பிரிந்திருக்கும் இந்தக் குடும்பங்கள் ஒன்று சேர ஒரு பொதுக் காரணி வேண்டுமல்லவா? அப்படியாக ஒரு வில்லன் வருகிறார். அவரின் மூலம் நேர்மையான அப்பாவிற்கு ஆபத்து வருகிறது. அப்புறம் என்ன? ‘இரண்டு கைகள் நான்கானால்’… என்று இரண்டு மகன்களும் ஒன்று சேர்ந்து வில்லனை அழிக்க… சுபம்.
ஏற்கெனவே சொன்னபடி மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே கதையம்சம் குறைவாக இருக்கிற படம் இது. மிகச் சிறந்த பாடல்கள், நேர்த்தியான ஒளிப்பதிவு, சுவாரஸ்யமாக அடுக்கப்பட்ட காட்சிகள், துள்ளலான நடனங்கள், வசனங்கள் போன்றவற்றின் மூலம் ஒரு நல்ல கேளிக்கைப் படமாகத் தந்திருந்தார் மணிரத்னம். அது கமர்ஷியல் சினிமாவாகவே இருந்தாலும் கூட அதன் தரத்திற்கு எத்தனை மெனக்கெட வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.
+ There are no comments
Add yours