‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’.
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். பல்வேறு பிரச்னைகளால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளியானது.
பெரும்பாலும் எளிய மனிதர்களின் கதைகளை கையில் எடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இப்படத்திலும் ஒரு சாமானியனின் கதையைத் திரையில் படரவிட்டிருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தனர்.
இதையடுத்து இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதுகளை வென்று வருகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் நடைபெறும் 29வது ‘Sedona International Flim Festival’ விருது விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் ‘Inspirational Feature Flim’ என்ற விருதினை வென்றுள்ளது.
இதுபற்றி விருது விழா மேடையில் பேசியுள்ள சீனு ராமசாமி, “இந்த விருது குறித்து எனக்கு இ-மெயில் வந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இன்று காலையில் பெய்யும் பனிப்பொழிவில் நான் நின்றிருந்தேன். அப்போது இயற்கை என்னை ஆசிர்வதிப்பதாக நினைத்துக்கொண்டேன். விருதினை வழங்கிய விழாக்குழுவினருக்கு நன்றி. முக்கியமாக நான் இங்கு வருவதற்கு உதவியாக இருந்த தமிழ்நாடு முதலைமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி. என் விஜய்சேதுபதிக்கும் நன்றி. இந்த விருதினை புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித்ரே-விற்கு அர்ப்பணிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours