“இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என கார்த்தி சொன்னதை ஒருபோதும் மறக்க மாட்டேன் என நடிகர் கவின் நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கான வரவேற்பு கூடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் கார்த்தியும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாக ‘டாடா’ படத்தைப் பார்த்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான படம். சிறப்பான எழுத்து மற்றும் படத்தின் உருவாக்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கவின் முழுமையான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைக்கண்டு பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள படத்தின் நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அது ஒரு ஐந்து நிமிட போன் கால். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், ‘இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என சொன்னதை மட்டும்நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours