எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் ‘வடக்கன்’ படப்பிடிப்பு துவக்கம்

Estimated read time 1 min read

பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி, ‘வடக்கன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து வேடியப்பன் கூறுகையில், “இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தோன்றுபவர்கள் அனைவரும் மண்ணின் மக்களாக இருப்பார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்” என்றார்.

image

‘வடக்கன்’ படம் குறித்து பாஸ்கர் சக்தி கூறுகையில், “எழுத்தாளனாக எனது பணியை துவங்கினேன். பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதன்முறையாக ஒரு இயக்குநராக ‘வடக்கன்’ மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன்.

எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா, தேனி மண்ணின் மனம் சார்ந்த பெண் ஆவார். பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பு அவர். இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இப்படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொன்டு இந்தப் படத்தை துவங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

image

இந்தப் படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக ‘sync sound’, அதாவது நேரடி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘தலைக்கூத்தல்’ திரைப்படத்தில் நேரடி ஒலிப்பதிவு செய்த ராஜேஷ் சசீந்திரன் இப்படத்திலும் பணியாற்றுகிறார். கர்நாடக இசைக் கலைஞர் எஸ். ஜெ. ஜனனி இசையமைக்க, ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். கலை இயக்குநராக காத்து மற்றும் படத்தொகுப்பாளராக நாகூரான் பணியாற்றுகிறார்கள். இப்படத்தில் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours