கார்த்தியின் திரைப்பயணத்தில் ‘பையா’ ஒரு மைல்கல். ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்றிருந்த கார்த்தியை ஸ்டைலிஷான நகரத்துப் பையனாக மாற்றிய பெருமை லிங்குசாமியின் ‘பையா’வுக்கு உண்டு.
கார்த்தி – தமன்னா கெமிஸ்ட்ரி, யுவனின் துள்ளல் இசை, ரோடு டிராவல் கதை என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்ததில் படம் பெரும் வசூலையும் குவித்தது. ‘பையா’ வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பின், இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதுகுறித்து லிங்குசாமி தரப்பில் விசாரித்தோம்.
பையா படம் உருவானது குறித்து லிங்குசாமி கூறியது இதுதான். “கார்த்திக்குப் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அவர்கிட்ட கதை சொன்னேன். அவருக்கு நான் சொன்ன ஸ்க்ரிப்ட் பண்றதுல பெரிய உடன்பாடில்ல. `சார், உங்ககிட்ட ‘ரன்’ மாதிரியான படம் எதிர்பார்த்தேன். மாடர்னா ஒரு கதை சொல்லுங்க’னு சொன்னார். அதன்பிறகுதான் ‘பையா’வோட ஒன்லைன் தோணுச்சு. கார், காதல்னு ஒருவிதமான மூட் பிடிச்சிருந்தது. கார்த்திக்கிட்ட கதை சொன்னேன். அப்ப அவர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஷூட்டிங்ல இருந்தார். `ஸ்க்ரிப்ட் ரொம்ப புதுசா இருக்கு சார்.’னு சொன்னார். அப்படிதான் பையா உருவாச்சு” என லிங்குசாமி முன்பு தெரிவித்தார். படமும் ஹிட்டடித்தது.
சமீபத்தில் தெலுங்கு ஹீரோ ராம் பொத்னேனி, கீர்த்தி ஷெட்டி கூட்டணியில் ‘வாரியர்’ என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி, அதன் பிறகு கமல் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. கமல் அடுத்து ஹெச்.வினோத், பா.ரஞ்சித், வெற்றிமாறன் என லைன்அப்கள் வைத்திருப்பதால் அதனை முடித்துவிட்டே லிங்குசாமியின் படத்திற்கு வருவார் என்பதால், இடையில் ஒரு படத்தை இயக்கி விட நினைத்தார். இந்தச் சூழலில் பல கதைகளையும் தயார்செய்து வந்தார். அதில் ஒரு கதை ‘பையா’ பாணியில் அமைந்தது. அதே சமயம் கார்த்தியும் இன்னொரு பக்கம் பிஸியானார். ராஜூமுருகன், நலன்குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரின் படங்கள் கைவசம் வைத்திருப்பதால், அவரால் ‘பையா’வுக்குள் வரமுடியவில்லை. லிங்குவின் இயக்கத்தில் ஆர்யா ‘வேட்டை’ பண்ணியிருப்பதால், இருவரின் நட்பும் இன்று வரை தொடர்கிறது.அதனால் ஆர்யாவிடம் ‘பையா2’வைப் பற்றி சொல்லவும் உற்சாகமாகிவிட்டார்.
ஹீரோயினைச் சுற்றித்தான் இந்த கதை நடக்கிறது என்பதால், கதாநாயகிகள் பலரும் பரிசீலித்தார்கள். இப்போது பூஜா ஹெக்டேவிடம் பேசி வருகின்றனர். இதுவரை ஆர்யா உறுதியாகி விட்டார். இன்னும் ஒருசில நாட்களில் பூஜாவும் உறுதியான பின், இரண்டு வாரங்களில் முறைப்படி அறிவிப்பு வரும் என்கிறார்கள். ‘பையா’ மும்பை வரை பயணித்தது போல, இரண்டாவது ‘பையா’ டெல்லி வரை பயணிக்கமா? அல்லது காஷ்மீர் வரை பயணிக்குமா? என்பது குறித்தும் கதை விவாதம் சூடாக, தீவிரமாக நடந்து வருகிறது.” என்கிறார்கள்.
+ There are no comments
Add yours