தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு
23 பிப், 2023 – 12:13 IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில் தற்போது 2023 – 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட் ராமனோடு மற்றொரு தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டது. தற்போது இரண்டு தேர்தல் அதிகாரிகளும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சங்கத்தின் தற்போதைய செயலாளரான மன்னன் தேர்தலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய சங்க விதிகளின் படி தேர்தலை நடத்த கூடாது பழைய விதிகளின் படிதான் நடத்த வேண்டும். புதிய விதிகள் சிலருக்கு சாதகமாக இருப்பதால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க இருக்கிறது. எனவே பழைய விதிகளின்படி தேர்தலை நடத்த வேண்டும், என்று அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
+ There are no comments
Add yours