ஆனால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வழங்கப்பட்ட இந்த விருதினைப் பலரும் இந்திய அரசு வழங்கும் தாதாசாகேப் பால்கே விருது எனத் தவறாகக் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘DadaSahebPhalkeAwards2023’ என்ற ஹேஷ்டாக் மட்டுமே பதிவு செய்து இது தொடர்பாகப் பதிவிட்டிருந்தார். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்தக் குழப்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் ‘Fact Check’ செய்யும் செய்தி நிறுவனமான ‘Alt News’ தளம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், இது போன்று ஒரே மாதிரியான பெயர்களில் இப்படி விருது விழா நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தது.
இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த அந்த செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், “‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தாதாசாகேப் பால்கே விருது விழாவில் வென்றது தொடர்பாக விவேக் அக்னிஹோத்ரி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. தாதாசாகேப் பால்கே பெயரில் ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விருது விழாவில்தான் இத்திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் எப்படி ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்படவில்லையோ, அதேபோல மத்திய அரசின் உயரிய தாதாசாகேப் பால்கே விருதிற்கும் தேர்வாகவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, “Hey Fake Checker, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் உங்களின் ஜிகாதி மாஃபியாவை அம்பலப்படுத்தியுள்ளது என்ற உண்மையுடன்தான் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதை எப்படிச் சமாளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள். அந்த விருதில் என்ன எழுதியுள்ளது என்று படிக்க முடியாத உங்களைப் போன்ற மதராசா அறிஞரை நான் குறை கூறவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜிகாதி மாஃபியா, மதராசா அறிஞர் என விவேக் அக்னிஹோத்ரி பேசியிருந்ததைப் பலரும் கண்டித்திருந்தனர்.
+ There are no comments
Add yours