இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரின் மறைவுச் செய்தி கடந்த ஓரிரு மாதங்களாக ரசிகர்களின் செவிகளில் ஒலித்தபடி இருக்கிறது. தென்னிந்திய திரையுலக ஜாம்பவானாக இருந்த கே.விஸ்வநாத் தொடங்கி, வாணி ஜெயராம், டி.பி.கஜேந்திரன் மற்றும் மயில்சாமி ஆகியோரது மறைவு திரைத்துறையினர், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது பிரபல மலையாள தொகுப்பாளினியின் மறைவு செய்தியும் வெளியாகியிருக்கிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மலையாள சினிமாவுக்குள் காமெடி நடிகையாக உலா வந்த சுபி சுரேஷ் உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 41.
கல்லீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அண்மை நாட்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சுபி சுரேஷ். நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் சுபி சுரேஷ் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி மலையாள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த சுபி சுரேஷ்?
மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சுபி சுரேஷ், மலையாளர் டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நிகழ்ச்சி மூலம் கேரள மக்களின் இல்லங்களில் நுழைந்து பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பால் சினிமாவுக்குள்ளும் நுழைந்த சுபி, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கனா சிம்மாசனம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலிலும் கலக்கியிருந்தார்.
சினிமாலா நிகழ்ச்சியை போல குழந்தைகளுக்கான குட்டி பட்டாளம் என்ற நிகழ்ச்சியையும் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தொகுத்து வழங்கினார் சுபி. குழந்தைகளோடு சுபி அளவலாவியது நேயர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்னர் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய சுபி சினிமாவுக்கு சென்ற பிறகு, 2018ல் மீண்டும் லேபர் ரூம் என்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளினியாக இருந்தார்.
இப்படியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த சுபி சுரேஷ் மறைந்தார் என்ற செய்தி வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours