தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையும் ஆதிக்கமும் அதிகமாகி வருவதாக தமிழர்களின் எதிர்ப்புகள் அதிகமாகிவரும் சூழலில், அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருவேறு கருத்துகள் பரவி வருகின்றன. ஏற்கெனவே, “வடக்கனும் கிழக்கனும் நம்மைப்போல ஏழை மனிதன்தான்” என்று விஜய் ஆண்டனியின் ஆதரவுக் குரல் வைரலாகி வந்த நிலையில் இயக்குநர் நவீன், “வடக்கிலிருந்து பிழைப்புத்தேடி வருகிறவர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல” என்று கருத்திட்டுள்ளார். அந்தப் பதிவு எதிர்ப்புகளையும் பாராட்டுகளையும் குவித்துவரும் சூழலில், இயக்குநர் நவீனைத் தொடர்புகொண்டு இந்தப் பிரச்னைத் தொடர்பாகப் பேசினேன்.
“வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்புத்தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல” என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால், வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் பிழைப்புத்தேடி வருவதற்குமான வித்தியாசத்தை உணராததால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறதா?”
“உண்மைதான். வடக்கத்திய ஆதிக்க அரசியலை எதிர்ப்பதும் மாநில சுயாட்சியுடன் நமக்கான உரிமைகளைப் பெறுவதும் அடையாளத்தை விட்டுக்கொடுக்காததும்தான் சரியான அரசியலாக இருக்கமுடியும். ஆனால், ஆதிக்க அரசியலை எதிர்க்காமல் நம்மால் யாரை எளிதாக அடிக்கமுடியுமோ அவர்களை அடித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் வடமாநில முதலாளிகள் பலர் இருக்கிறார்கள். என்றைக்காவது அவர்களை எதிர்த்துப் பேசியுள்ளோமா? வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையை இன்றிலிருந்து பார்க்காமல் வரலாற்றின் வழியாகப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.
“இட ஒதுக்கீடு சாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் கொடுக்கவேண்டும்” என்கிறது ஒரு கூட்டம். இட ஒதுக்கீடு குறித்த இந்தக் கருத்தை இன்றுள்ள வசதி வாய்ப்புகளைப் பார்த்து பேசுவது தவறு. இட ஒதுக்கீடு எதனால் வந்தது என்பதை இரண்டாயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்த்தால்தான் சரியாக இருக்கும். சாதியின் அடிப்படையில் அத்தனை வருடங்கள் ஒடுக்கப்பட்டனர். எந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதே அடிப்படையில் படிக்க வைப்பதுதான் இடஒதுக்கீடு. இந்தியாவில் முதன்முதலில் சட்டப்பூர்வமாக இட ஒதுக்கீடு வந்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான். பெண்களுக்கு ஓட்டுரிமையும் கொடுத்தார்கள். இந்த முன்னுதாரணங்களால் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சிதான் நமக்கும் வடமாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசம். இன்று நம் மக்களுக்கு ஓரளவுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்துவிட்டன. அரிசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர் அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டோம். இதனால், ஏழைகள் தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று யோசிக்கிறார்கள். அடுத்தக் கட்டத்திற்குச் செல்கிறார்கள்.
ஆனால், வடமாநில மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அப்படித்தான், இப்போதும் அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், வயிற்றுப் பிழைப்பிற்காக குறைந்த கூலிக்கு இங்கு வந்து கஷ்டப்படுகிறார்கள். இதுவே, 200 ரூபாய் சம்பளத்தில் தமிழர்களை வேலை செய்யச் சொன்னால் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. தமிழக ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இன்று வெளிநாடுகளில் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் வரும்போது ஏன் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்று நினைப்பது சரிதானே?! அந்த இடத்தை நிரப்புவதற்குத்தான் வடமாநிலத் தொழிலாளிகள் வருகிறார்கள். எல்லோரும் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் ஷர்மாவாகவோ வர்மாவாகவோ இருக்கமாட்டார்கள். அவர்களைத்தான் நாம் வந்தேறிகள் என்று அடிக்கிறோம். நம் முன்னேற்றத்தில் கட்டமைப்பு வசதிகளில் அவர்களின் பங்கும் இருக்கிறது. ஏனென்றால், உழைப்பாளர்களின் பங்கு இல்லாமல் உலகத்தில் எதுவுமே நடக்காது. அவர்கள் இல்லையென்றால் அந்த வேலையைச் செய்ய நம் ஊரில் யாரும் இல்லை.
“தமிழர்கள் யாரும் வேலை இல்லை என்று சொல்லவேண்டாம்” என்கிறார் வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்குறீங்களே? உண்மையிலேயே, தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் தமிழர்களுக்கு நல்ல சம்பளம் போட்டு வேலை கொடுக்கலாமே? ஏன் அவர்கள் செய்யவில்லை? உண்மையில் இது பக்கா உழைப்புச் சுரண்டல். வடமாநிலத் தொழிலாளிகள் தனது குடும்பத்தை விட்டுவிட்டு இங்கு வந்து நாயா, பேயா கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய உழைப்பை நாம் சுரண்டிக்கொண்டு இருக்கிறோம். இந்த உழைப்புச் சுரண்டல் குறித்து பேசுவதில்லை.
ரயில்வே துறையில் ஆதிக்கம், போட்டித் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் எழுதச்சொல்வது, நம் அரசுகள் கஷ்டப்பட்டு மருத்துவக் கல்லூரிகளைக் கட்டினால் நீட் கொண்டுவந்து வெளிமாநிலத்தவர்களை ஈசியாக உள்ளே நுழைப்பது போன்ற வடவரின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கவேண்டும். அதைவிடுத்து, நாதியற்று இருக்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள். எந்தப் பிரச்னையிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதுதான் சரியான அரசியல். குறைந்த சம்பளத்திற்கு ஹோட்டல் வேலைக்கு வரும் வடமாநிலத் தொழிலாளிகளின் உழைப்புச் சுரண்டலுக்காகவும் நமது குரல் ஒன்றுசேர்ந்து ஒலிக்கவேண்டும். அதுதான், சரியான அறமாக இருக்கமுடியும்”.
“ஆனால், வடமாநிலத் தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் வலம்வரும் வீடியோக்கள் பொதுமக்களுக்கு அச்சத்தைத்தானே ஏற்படுத்தியிருக்கும்?”
“இஸ்லாமியர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்தால் ‘முஸ்லிம் ஜிகாத்’ என்கிறார்கள். அதுவே, ஒரு இந்து பாலியல் வன்புணர்வு செய்தால் அது தனிமனித செயலாக்கப்படுகிறது. நல்லவர், கெட்டவர் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். யார் தவறு செய்தாலும், அதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக, ஒட்டுமொத்த வடமாநிலத்தவர்கள் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது. பொதுப்புத்தியுடனும் அணுகக்கூடாது. இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்கிற வாதம் மாதிரிதான் இதுவும். “வடக்கன் உருட்டுக் கட்டை எடுத்துட்டானா? விடக்கூடாதுடா!” என்று பேசக்கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டக்கல்லூரியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் சாதி இந்து மாணவரைத் தாக்கினார்கள். எந்தவிதமான வன்முறையும் தவறுதான். ஆனால், ஏன் அவர்கள் உருட்டுக்கட்டை எடுத்தார்கள் என்பதை ஆராயவேண்டும். வடமாநிலத்தவர்கள் ஒன்றும் தமிழ்நாட்டை நாங்கள்தான் ஆள்வோம் என்று சொல்லவில்லையே! அப்படிச் சொன்னால்தான் எதிர்க்கவேண்டும். எது அரசியல், எது பொதுப்படையான அரசியல், எது தனிமனித பிரச்னை என்ற தெளிவும் பகுத்தறிவும் முக்கியம்”.
“வடமாநிலத் தொழிலாளர்கள் மீதான சீமானின் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“சீமான் அண்ணன் மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது. ஆனால், நான் ஆட்சிக்கு வந்தால் இங்கிருப்பவர்களை விரட்டுவேன். அப்படிப் போகவில்லை என்றால், ‘இந்தா கஞ்சா கேஸை அவன்மேல போடு, இந்தா ரேப் கேஸை அவன்மேல போடு என்பேன்’ என்கிறார். இது எவ்வளவு ஆபத்தான பேச்சு தெரியுமா? இப்போ, இதே விஷயத்தை மராட்டியர்கள் தாராவியில் வசிக்கும் தமிழர்களுக்குச் செய்தால் நாம் என்ன செய்வோம்? பால் தாக்கரே மாதிரி வெறுப்பரசியலை செய்துதான் ஜெயிக்கவேண்டுமா? ஒரு தலைவர் உணர்ச்சிவசப்பட்டு தொண்டர்களையும் இயக்கத்தையும் வழிநடத்தக்கூடாது. அறிவுமயப்படுத்திதான் நடத்தவேண்டும். இப்படி உணர்ச்சிவசப்படுத்துவதால், நாளை பீகாரிலிருந்து வந்து மூட்டைத் தூக்கிக்கொண்டிருக்கும் ஓர் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளியையும் குறைவான சம்பளத்திற்கு பிளேட் கழுவிக் கொண்டிருப்பவர்களையும் தாக்குவார்கள். இந்த வன்மம் தேவையற்றது.
அதேபோல, இது எங்க இடம், எங்க எல்லை என்பதெல்லாம் கிடையாது. வரலாறு முழுக்க இனக்கலப்பு நடந்துள்ளது. அதனால், இனத்தூய்மைவாதம் பேசமுடியாது. இன மரபுப்படி பார்த்தால் சிவப்பாக, உயரமாக, கூரிய மூக்குடன் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தமிழ் இனத்தவர்கள் கிடையாது. இதன்படி பார்த்தால், இன்று இனத்தூய்மைவாதம் பேசும் பாதிப்பேர் தமிழர்களே இல்லையே? எட்டு தலைமுறைகளுக்கு முன்பு இனக்கலப்பு நடந்துள்ளது. இதுதான் இயற்கை. இதனைத் தவிர்க்கவும் முடியாது. இனத்தூய்மைவாதம் பேசுகிற நாம் தமிழர் கட்சியில் மரபுவழிப்படி எடுத்துப்பார்த்தால் முக்கால்வாசிப்பேர் தமிழர்களே இல்லை. வெறும் தமிழ்ப் பேசும் சாதியில் பிறந்துவிட்டால் நீங்கள் தமிழர் ஆகிவிடமுடியாது”.
“வடமாநிலத் தொழிலாளர்களை இறக்கி தமிழகத்தில் பா.ஜ.க ஓட்டு வாங்கப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளதே?”
“வடமாநிலத்தவர்கள் இங்கு ஒன்றும் அரசியல்மயப்படுத்தவில்லையே? அப்படி அரசியல்மயப்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கவேண்டும். ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது. அதைத் தவிர்த்து, வேலையே செய்யக்கூடாது என்பதில் நியாயமில்லை”.
+ There are no comments
Add yours