நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours