பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. 1984ல் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் 100- க்கும் மேற்பட்ட படங்களில் நகைச் சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மயில்சாமியின் மறைவு குறித்து அவரின் நெருங்கிய நண்பரான நகைச் சுவை நடிகர் மனோபாலாவிடம் பேசினோம், “அவனுக்கு நிறைய தடவ நெஞ்சு வலி வந்திருக்கு. ஆனா அவன் அதை ஒரு பொருட்டாவே மதிச்சது இல்ல. அவன மாதிரி ஒரு கொடை வள்ளல பார்க்கவே முடியாது. காச கொஞ்சம் கூட வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டான். வெளியூருக்கு போய் வேலை பார்க்கும்போது காசு கொடுத்தாங்கனா காசு மொத்ததையும் அங்க இருக்க நடிகர், நடிகைகளுனு சுத்தி இருக்கவுங்களுக்கெல்லாம் செலவு பண்ணிடுவான். 1 லட்சம் ரூபாய் கொடுத்தா 5 ஆயிரம் 6 ஆயிரம்தான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போவான்.
இந்த கொரோனா நேரத்துல ஓட்டல் இல்லாம இருந்த நேரத்துல சாப்பாடு தயார் பண்ணி பல உயிர்கள காப்பாத்திருக்கான். ஓட்டல்ல இருக்குற சமையல்காரர் வீட்டுக்கே போயி அய்யா என் வீட்டுல வந்து சமைச்சுக்குடுங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்து சமைக்க வச்சு நிறைய பசங்களுக்கு ரூம்லயே போய் கொடுத்து சாப்புடுங்கனு சொல்லிட்டு வருவான். கொரோனா மட்டும் இல்லாம புயல் சமயத்துல கூட பலருக்கும் சாப்பாடு போட்டான்.
வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் வரை அவனைத் தெரியாத ஆட்களே கிடையாது. எல்லா ஊர்லையும் அவன் ஆட்கள் வச்சிருந்தான். நேத்து சிவன் ராத்திரிக்கு சிவன் கோயிலுக்கு போயிருக்கான். வரும்போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்காங்க இறந்துட்டான்” என்றார். நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours